Published : 24 Jun 2019 12:00 AM
Last Updated : 24 Jun 2019 12:00 AM

சென்னை - அரக்கோணம் தடத்தில் சோதனை முயற்சியாக மின்சார ரயில் இன்ஜினில் 3 கேமராக்கள்: விபத்துக்கான காரணத்தை துல்லியமாக கண்டறியலாம்

சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் இன்ஜினில் 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்டவாளம், சிக்னல்செயல்பாடுகள், ரயில் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க முடியும்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து வேளச்சேரி, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 670 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

தண்டவாளத்தில் விரிசல், ரயில்கள் சிவப்பு சிக்னலை கடந்து செல்வது, தடம்புரள்வது, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, விபத்துக்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்முதல் கட்டமாக, சில விரைவு ரயில்களின் இன்ஜினில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக தெற்கு ரயில்வேயில் சென்னை - அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயிலின் இன்ஜினில் சோதனை முறையில் 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:விபத்துக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய அரக்கோணம் மின்சார ரயில் இன்ஜினில் 3 கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

இன்ஜின் முகப்பில் உள்ள கேமரா மூலம் தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம். பக்கவாட்டில் உள்ள கேமராமூலம் ரயிலின் பின்பகுதி வரையிலும், படிகளில் யாராவது பயணம் செய்கிறார்களா என்பதையும் காணலாம். ஓட்டுநர் கேபினில் உள்ள கேமரா வாயிலாக, அவர்கள் சரியான முறையில் ரயிலை இயக்குகின்றனரா என்பதை கண்காணிக்க முடியும்.

இதன்மூலம் விபத்துக்கான காரணத்தை மட்டுமின்றி, அதற்கானதீர்வுகளையும் எளிதில் கண்டறிய முடியும். படிப்படியாக மற்ற ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓட்டுநர்கள் அதிருப்திஇன்ஜின்களில் சிசிடிவி பொருத்தப்படுவது பற்றி ரயில் ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:

ரயில் பயணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை. தற்போது அரக்கோணம் தடத்தில் இயக்கப்படும் புதிய மின்சார ரயிலில் மகளிர் பெட்டி,ஓட்டுநர் கேபினில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்ஜின் முகப்பு, ஓட்டுநர் கேபின் பக்கவாட்டில் கேமராக்கள் இருப்பதில் தவறு இல்லை.

அதேநேரம், ஓட்டுநர் கேபினுக்குள் நடுப்பகுதியில் கேமரா வைப்பது தேவையற்றது. தாங்கள்தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம் என்பது ஓட்டுநர்கள், குறிப்பாக பெண் ஓட்டுநர்களுக்கு மனஉறுத்தலை ஏற்படுத்தும். எனவே, கேபினுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை நிர்வாகம் நீக்க வேண்டும்.

ஏற்கெனவே, ரயில்கள் இயக்கம், எங்களது பணி ஆகியவை கணினி மூலமாகவும், ஸ்பீடா மீட்டர் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தவிர, சிக்னல் கட்டுப்பாட்டு மையத்தில் கேமராக்கள் பொருத்தினால், ரயில் இயக்கத்தின் முழுசெயல்பாடுகளையும் கண்காணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x