Published : 14 Jun 2019 12:00 AM
Last Updated : 14 Jun 2019 12:00 AM
மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் பொழுதுபோக்குவதற்கு வசதியாக கேபிள் டிவி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கைதிகள் பார்த்து ரசிக்கலாம்.
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை, விசாரணைக் கைதிகள், தீவிர குற்றச் செயல் புரிந்தவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உட்பட சுமார் 1,800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் கைதிகளுக்கு சிறை வளாகத்தில் சிமென்ட் கிராதி கற்கள் தயாரிப்பு உட்பட சில சுய தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். விடுதலையாகி செல்லும்போது சிறையில் பணியாற்றியதற்கான சம்பளமும் வழங்கப்படுகிறது.
ஆனால் விசாரணைக் கைதிகள், தீவிர குற்றச் செயல் புரிந்தவர்களுக்கு இது போன்ற வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவர்களை வெளியில் விடுவதில்லை. அறைக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இது போன்ற சூழலில், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பகல் நேரத்தில் பொழுது போக்கும் வகையில் கேபிள் டிவி இணைப்பு வழங்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, மதுரை மத்திய சிறையில் உள்ள அனைத்து கைதிகளின் பிளாக்கிலும் கேபிள் டிவி இணைப்பு வழங்க உத்தரவிட்டது. இதன்படி, சிறை வளாகத்தில் அனைத்து பிளாக்கிலும் ஏற்கெனவே பொருத்தி இருந்த அனைத்து டிவியில் கேபிள் இணைப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதற்கான ஒளிபரப்பை சிறைத் துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறையில் உள்ள அனைத்து கைதிகள் தூர்தர்ஷன் நிகழ்ச்சி மட்டும் பார்க்கும் வகையில் 100 டிவிக்கள் ஏற்கெனவே செயல்படுகின்றன. ராஜிவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில், அனைத்து கைதிகளும் பயன் பெறும் வகையில் கேபிள் இணைப்புக்களை வழங்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 100 டிவிக்களுக்கும் செட்டாப் பாக்ஸ் பொருத்தி கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. செய்தி சேனல்கள் தவிர, பிற தமிழ் சேனல்களைப் பார்க்கலாம். இதைக் கண்காணிக்க தொழில்நுட்பப் பிரிவில் இருந்து ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கைதிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT