Published : 03 Jun 2019 09:11 PM
Last Updated : 03 Jun 2019 09:11 PM

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் 3-ம் ஆண்டு நினைவு நாள்: எம்ஜிஆர், கருணாநிதி, முகமது அலி இடையே உள்ள ஒற்றுமை

உலக குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் போற்றப்பட்ட முகமது அலியின் 3-வது நினைவு தினம் இன்று. அவருக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, எம்ஜிஆர் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942-ம் ஆண்டு பிறந்த முகமது அலியின் இயற்பெயர் காஸியஸ் மெர்ஷிலிஸ் கிளைவ். கறுப்பின விடுதலைக்காக போராடிய ஒருவரின் பெயர்தான் அது. அந்தப் பெயரைத் தாங்கியதாலோ என்னவோ அவரும் கருப்பின விடுதலைக்காக துணிச்சலுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

12-வது பிறந்த நாளில் பெற்றோர் ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் பொருட்காட்சி ஒன்றுக்கு கொண்டு சென்றபோது காணாமல் போனது. இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற முகமது அலி ஜோ மார்ட்டின் என்ற போலீஸ்காரரிடம் புகார் அளித்தபின், ஆவேசமாக திருடன் மட்டும் தன் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்காமல் விட மாட்டேன் என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட மார்ட்டின், அலியைப் பார்த்து மிரட்டல் விடுவதற்கு முன்பு முதலில் முறையாக குத்துச்சண்டை கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

குத்துச்சண்டை பயிற்சியாளரான மார்ட்டின் முகமது அலிக்கு குத்துச் சண்டையை கற்றும் கொடுத்தார். அவருடைய கோச் ஃபிரட்ஸ் டோனர், ‘‘வண்ணத்துப் பூச்சியைப் போல பறந்து, தேனியைப் போல‌த் தாக்கு’’ என்று ஒரு புதிய ஸ்டைலை கற்றுக் கொடுத்தார். மார்ட்டினின் வழிகாட்டுதலின்படி அலி பல போட்டிகளில் வெற்றி பெற்றார்.

1960-ம் ஆண்டில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அலி தங்கப் பதக்கம் வென்றார். தங்கப்பதக்கத்துடன் தாய்நாடு திரும்பியவர், அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, நண்பர்களுடன் ஒரு பெரிய கேளிக்கை உணவகத்திற்கு நுழைய, அவரைத் தடுத்து, ‘‘கறுப்பர்களுக்கு இங்கு எதுவும் வழங்குவதில்லை. வெளியே செல்லுங்கள்’’ என்று தெரிவித்தார் ஊழியர்.

‘‘நான், நம் நாட்டுக்காக இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஜெயித்திருக்கிறேன்’’ என்று முகமது அலி சொன்ன பிறகும், மேலாளரிடம் எந்த
மாற்றமும் இல்லை. ஆத்திரத்தில் ஆற்றில் தங்கப்பதக்கத்தை வீசி எறிந்ததாகச் சொல்வார்கள்.

அதன் பின்னர் குத்துச்சண்டை களத்தில் மட்டுமின்றி அமெரிக்காவில் அக்காலத்தில் தீவிரமாகப் பரவியிருந்த இனவெறிக்கு எதிராகவும் அவர் போராடினார். அவர் குவிக்கும் வெற்றிகள் கறுப்பின மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தின. 1964-ல் முதல் ஹெவி வெயிட் பட்டம் வென்றார். 3 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.

1960-ல் இருந்து 1981 வரை முகமது அலி குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தார். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56-ல் வெற்றி பெற்று தோற்றது வெறும் 5 போட்டிகளில் மட்டுமே. 37 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றதால் ‘நாக் அவுட் நாயகன்’ என்று அழைக்கப்பட்டார்.

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராட்டக் களத்தில் கருத்துகளைத் தெரிவித்து வந்த முகமது அலி ஒரு கட்டத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 1967-ம் ஆண்டு வியட்நாம் யுத்தத்தில் அவரைக் கலந்துகொள்ள அரசு உத்தரவிட்டது. வியாட்நாம் மக்கள் எங்களை கறுப்பர்கள் என்று ஒதுக்கவில்லை. அவர்களுடன் எந்தப் பகையும் எங்களுக்கு இல்லை. ஆகவே போரிடப் போக முடியாது என மறுத்தார்.

இதனால் அலியின் பட்டம், பதக்கங்கள் பறிக்கப்பட்டு, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் 1970-ல் வெளியே வந்தார். அதன் பின்னர் நடந்த 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் சுதாரித்து அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார்.  குத்துச்சண்டை களத்தில் இருந்து ஓய்வுபெற்ற அவரை 1984-ல் பார்கின்சன் நோய் தாக்கியது.

ஒருவகை வாத நோய் அது. குத்துச்சண்டை போட்டிகளில் வாங்கிய குத்துகள் அவரது தலை நரம்பு மண்டலத்தைத் தாக்கியதால் இந்நிலை ஏற்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்கின்சன் நோயுடன் போராடி வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு சுவாசப் பிரச்சினை காரணமாக பீனிக்ஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி ஜூன்  3-ம் தேதி அன்று உயிரிழந்தார்.

வாழ்நாள் முழுதும் தம் கறுப்பின மக்களைப் பற்றி நினைத்தவர் முகமது அலி. அவர் மறைந்து இன்றோடு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கருணாநிதி, எம்ஜிஆர், முகமது 3 பேருக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று கேட்கிறீர்களா? மூவருமே புகழின் உச்சியில் இருந்தவர்கள் சாதாரண மக்களைப் பற்றி சிந்தித்தவர்கள்.

எம்ஜிஆர், கருணாநிதி இருவரையும் சென்னை வந்தபோது முகமது அலி சந்தித்துப் பேசினார். எம்ஜிஆர் வீட்டில் மீன் உணவை விரும்பி உண்டார். இதையெல்லாம்விட மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

அது எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17 தான் முகமது அலிக்கும் பிறந்த நாள். எம்ஜிஆர் பிறந்த நாளில் பிறந்தவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று மறைந்தது விநோதமான ஒன்றுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x