Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM
திருச்செங்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் குடிசை தொழில்போல் மேற்கொள்ளப்பட்டு வந்த ஊதுபத்தி தொழில், பல்வேறு பெரு நிறுவனங்களின் வருகையால் நலிந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் ஊதுபத்தி தயாரிப்பு தொழில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் திருச்செங்கோடு அருகே புதுப்பாளையத்தில் இயங்கும் காந்தி ஆசிரமம் மூலம் வழங்கப்படுகிறது.
பின்னர் ஊதுபத்திகளை மீண்டும் ஆசிரமத்திலேயே வழங்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் உற்பத்தி யாளர் களிடம் இருந்து வாங்கப்படும் ஊதுபத்திக்கு உரிய தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் வாரந்தோறும் பெண்கள் ரூ.300 வரை வருவாய் ஈட்டி வருகின்றனர். காந்தி ஆசிரம ஊதுபத்திகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகம் என்பதால், உற்பத்திக்கு தகுந்தாற்போல் வருவாயும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஊதுபத்தி விற்பனையில் பல பெரிய நிறுவனங்கள் கால் பதிக்கத் தொடங்கி, அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றின் வருகை, விளம்பர யுக்தி போன்ற பல்வேறு காரணங்களால், காந்தி ஆசிரம ஊதுபத்தி மீதான வரவேற்பும் குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக ஊதுபத்தி தயாரிப்பு தொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்த கிராமப்புற பெண்களும், வேலையிழக்கும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுப்பாளையம், வைரம்பாளையம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஊதுபத்தி தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவோர் கூறியதாவது:ஊதுபத்தி தயாரிப்புக்குத் தேவையான குச்சி உள்ளிட்ட மூலப்பொருட்கள் காந்தி ஆசிரமத்தில் விலைக்கு வாங்கி வருவோம். அவற்றை ஊதுபத்தியாக தயாரித்து வாரந்தோறும் வழங்குவோம். அதை பாக்கெட்டில் அடைத்து ஆசிரமத்துக்கு சொந்தமாக சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள், கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. உற்பத்தி செய்து கொடுக்கப்படும் ஊதுபத்திகளுக்கு ஏற்றார்போல் பணம் வழங்கப்படும்.
அதிக முதலீடு இல்லாமல் இத்தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குறைவான வருவாய் கிடைத்தாலும், நிரந்தரமாக இந்த வருவாய் கிடைத்து வந்தது. எனினும், காந்தி ஆசிரம ஊதுபத்திக்கு இணையாக சந்தையில் ஏராளமான ஊதுபத்திகள் விற்பனை வருகின்றன. அவற்றுடன் போட்டி போட இயலாத காரணத்தினால், காந்தி ஆசிரம ஊதுபத்திகள் விற்பனை யாகாமல் தேக்கமடைகின்றன. இதனால், உற்பத்தி, வருவாய் குறைந்துள்ளது. போதிய வருவாயின்மை காரணமாக பலரும் இத்தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், என்றனர். இதுகுறித்து திருச்செங்கோடு காந்தி ஆசிரம செயலாளர் எம்.குமார் கூறியதாவது:
ஒரு காலத்தில் காந்தி ஆசிரம ஊதுபத்திகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். எனினும், பெரு நிறுவனங்கள் ஊதுபத்தி தொழிலில் கால் பதித்துள்ளதால் போட்டி அதிகரித்துள்ளது. போட்டி போட்டு காந்தி ஆசிரம ஊதுபத்தி விற்பனை செய்யப்படுகிறது. ஊதுபத்தி தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டு வந்தது. தற்போது இது குறைந்துள்ளது. பெரு நிறுவனங்களின் வருகையே இதற்கு காரணமாகும்.
எனினும், போட்டியை சமாளித்து ஊதுபத்தி விற்பனை செய்யப்படுகிறது. போட்டி ஒருபுறம் இருந்தாலும் காந்தி ஆசிரம ஊதுபத்திகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு இத்தொழிலை கடுமையாக பாதிக்கச்செய்கிறது. ஜிஎஸ்டியை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி ஆசிரமப் பொருட்களுக்கு 70 ஆண்டில் இல்லாத வகையில் தற்போது வரி விதிக்கப்படுகிற து. இந்த வரியை நீக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT