Published : 04 Jun 2019 09:53 AM
Last Updated : 04 Jun 2019 09:53 AM
தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகளால், விவசாய நிலங்கள் மட்டுமின்றி, தண்ணீர், காற்று என அனைத்துமே பாதிக்கப்படுகிறது. கழிவுகளை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்றாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. விவசாயிகள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
கொங்கு மண்டல மாவட்டங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்தாலும், தொழில் துறையும் வேகமாய் வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை இது ஊக்குவித்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. விவசாய சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டவை, சுற்றுச்சூழலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதுடன், அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். தேங்காய் சிரட்டைகளை மாலையாக கட்டி எடுத்து வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய சங்கத் தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி மற்றும் நிர்வாகிகளிடம் பேசினோம்.
"உலகம் முழுவதும் வரும் 5-ம் தேதி (நாளை) உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். ஆனால், உண்மையில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை.மதுக்கரை வட்டம் செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓராட்டுக்குப்பை கிராமத்தில், நிலத்தில் 20 அடி முதல் 30 அடி
வரை ஆழமான தொட்டி அமைத்து, மலைபோல தேங்காய் சிரட்டைகளைக் குவித்து, 24 மணி நேரமும் எரித்து, கரியாக்குகின்றனர். இந்த தொழிற்சாலையின் கழிவுநீரை நிலத்துக்கடியில் விடுகின்றனர். இதனால், நிலத்தடி நீரும், சுற்றுவட்டார விவசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் கரும்புகையால், சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல, பல கரித்தொட்டி கம்பெனிகள் வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் செயல்படும் பல்வேறு ஆலைகளும், ரசாயனக் கழிவுகளை
சுத்திகரிக்காமல், நிலத்துக்கு அடியிலும், கிணறுகளிலும் விடுகின்றன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்து விடுகிறது. மேலும், பல ஆலைகள் பெரிய
குழிதோண்டி கழிவுகளைப் புதைத்துவிடுவதால், நிலத்தடி நீருடன், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அருகில் உள்ள பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு மற்றும் கிணற்று நீர், கழிவுநீராக மாறுகின்றன. குடிப்பதற்கும், பாசனத்துக்கும் தண்ணீரின்றி மக்கள் அவதியுறுகின்றனர். பல பகுதிகளில் கால்நடைகளுக்கு கொடுக்கக்கூட தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் வேதனைக்குள்ளாகின்றனர்.
இதேபோல, பல தொழிற்சாலைகள் கரும்புகையை தொடர்ந்து வெளியிடுவதால், காற்று மாசு அதிகரிக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் நோய்கள், புற்றுநோய் பாதிப்பு என பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வீடுகளில் உணவுப் பொருட்கள் மீது கரித்துகள்கள் படர்கின்றன.
ரசாயனப் பொருட்கள், சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மிகுந்த அபாயம் கொண்டவை. இவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், கிணறுகளிலும்,
நிலத்துக்கு அடியிலும் சேமிக்கின்றனர். இவை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதேபோல, பல தொழிற்சாலைகள் குழாய்கள் மூலம், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, அருகில் பாயும் ஓடை, வாய்க்கால், நதிகளில் கலந்துவிடுகின்றனர். இதனால், அந்த நீர்நிலைகள் மாசடைவதுடன், அந்த தண்ணீரைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பொருளாதாரத்துக்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொழிற்சாலைகள் அவசியம்தான். பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன.
எனவே, நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு தொழிற்சாலைகளை எதிர்க்கவில்லை. அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முறையாக சுத்திகரித்து, நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வெளியேற்ற வேண்டுமென்றுதான் வலியுறுத்துகிறோம்.
நமது எதிர்கால சந்ததிக்கு, பாதுகாப்பான பூமியை விட்டுச்செல்வது ஒவ்வொருவரின் கடமை. விவசாயம் அழிந்துவிட்டால், உணவுக்கு எங்கோ போவது? இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து போராடிக்
கொண்டுதான் வருகிறோம். தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் இனியாவது தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, இந்த மண்ணையும், விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT