Published : 11 Jun 2019 12:00 AM
Last Updated : 11 Jun 2019 12:00 AM
அதிமுகவின் இரட்டைத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜன் செல்லப்பா எம்எல்ஏவின் மகனும், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவருமான ராஜ்சத்யன், முதல்வர் பழனிசாமியை நேற்றுமுன்தினம் இரவு திடீரென சந்தித்தார்.
மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, கட்சித் தலைமைக்கு எதிராக பேசியபோது அவருடன் அவரது மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளருமான ராஜ்சத்யன் இல்லை. அதனால், ராஜன் செல்லப்பா பேசிய கருத்தில் ராஜ்சத்யனுக்கு உடன்பாடு இல்லையா என்ற கருத்து கட்சியினரிடத்தில் எழுந்தது.
இதுவரை அவர், தனது தந்தையின் கருத்துக்கு வெளிப்படையாக ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. ராஜன்செல்லப்பாவும், கட்சித் தலைமைக்கு எதிராக செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘இது என்னுடைய கருத்து மட்டும்தான், இந்தக் கருத்துக்கும் என்னுடைய ஆதரவாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்காக அவர்களை நான் பலிகடாவாக்க விரும்பவில்லை’’ என்றார்.
இந்நிலையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில் திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
மாநில தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் என்ற அடிப்படையில் ராஜ்சத்யன் தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்து வருகிறார். மதுரையில் ராஜன் செல்லப்பா மகனுக்கு ‘சீட்’ கிடைக்க முதல்வர் பழனிசாமியும் ஒரு காரணம் என்று அப்போதே கூறப்பட்டது.
தற்போது கட்சித் தலைமைக்கு எதிராக பகிரங்கமாகப் பேசியும் அவரிடம் குறைந்தபட்சம், விளக்கம்கூட கேட்கப்படாததால் முதல்வர் பழனிசாமி பின்னணியில்தான் ராஜன் செல்லப்பா பேசினாரா அல்லது கட்சிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியதால் முதல்வர் அவர் மீது கோபத்தில் உள்ளாரா என்பது தெரியாமல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். நாளை நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இபிஎஸ் - ஓபிஎஸ்.ஸுக்கு பாராட்டு
அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மதுரை முன்னாள் மேயரும், எம்எல்ஏ.வுமான ராஜன்செல்லப்பா, நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் இருவரையும் பாராட்டிப் பேசினார்.
கடந்த 8-ம் தேதி ‘அதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, அதிகாரமுள்ள ஒற்றைத் தலைமைதான் வேண்டும், விவாதிக்கப் பொதுக்குழுக் கூட்டம் அல்லது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என்று கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘அதிமுகவுக்கு தற்போது புதிய இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இத்தேர்தலில் கட்சியில் திறம்படச் செயல்படுகிறவர்கள், மூத்தவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும்' என்று தெரிவித்தார். ஒரேநாளில் ராஜன் செல்லப்பாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT