Published : 25 Jun 2019 11:11 AM
Last Updated : 25 Jun 2019 11:11 AM
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, 2021ம் ஆண்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
அதற்காக, ரூ.20 கோடியில் தீ விபத்தில் சேமதடைந்த மண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், அதனை தொடர்ந்து கோயில் பெயிண்டிங் பணியும் விரைவில் தொடங்க உள்ளது.
வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், மீனாட்சியம்மன் கோயிலுக்காக உலகளவில் அதிகம் அறியப்படுகிறது.
இந்த கோயில், 8 கோபுரங்களை கொண்டுள்ளது. கோயில் உள்பிரகாரத்தில் பல மண்டபங்கள் இருந்தாலும், ஆயிரம் கால்(1,000 தூன்கள்) மண்டபம் மிகவும் பிரசித்திப்பெற்றது. வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கட்டிடக்கலை நுணுக்கமும் ஒருசேர பெற்றுள்ள இந்தகோயில், காசி, சிதம்பரம், திருக்காளத்தி வரிசையில் இந்தியாவின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக கருதப்படுகிறது.
இந்த கோயிலுக்கு தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் சுற்றுலா, ஆன்மீக ரீதியாக வந்து செல்கின்றனர். உலக புகழ் பெற்ற இந்த மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம், கடைசியாக 2009ம் ஆண்டு நடந்தது.
பொதுவாக கோயில் கும்பாபிஷேகங்கள் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2021-ல் மீனாட்சி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த இந்து அறநிலைத்துறை ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்து அறநிலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோயில் கும்பாபிஷேகம் இதற்கு முன் 1923, 1963, 1974, 1995 ஆண்டுகளில் நடந்துள்ளது.
இடையில் சில காலம் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தடைப்பட்டுள்ளது. கடைசியாக 2009ம் ஆண்டு கும்பிஷேகம் நடந்ததால் 2021-ல் நடத்த உள்ளோம்.
மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்தாண்டு பிப்- 2ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு கோயிலில் உள்ள பழமை வாய்ந்த வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த மண்டபம் பழமை மாறாமல் முன்பு இருந்தது போன்றே ரூ.20 கோடியில் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது. மண்டபம் கட்டி முடிப்பதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகும். கும்பாபிஷேகத்திற்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக சேதமடைந்த மண்டபத்தை சரி செய்ய நாமக்கல் பகுதியில் பழமையான, குளிர்ச்சியான, தரமான கருங்கற்களை சில குவாரிகளில் தேர்வு செய்து வெட்டி எடுத்து வர அரசு அனுமதி அளித்துள்ளது.
கல்லில் இவ்வளவு பெரிய மண்டம் கட்டியதில்லை. அதற்காக கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்று மற்ற பிரசித்திப்பெற்ற கோயில்களையும் பார்வையிட்டு, அந்த கோயில்களை வடிவமைத்த ஸ்தபதிகளிடம் பேசி வந்துள்ளோம். அதன் அடிப்படையில் பழமை மாறாமல் வீரவசந்தராயர் மண்டபத்தை கட்ட உள்ளோம்.
இந்த மண்டபம் கட்டுமானப்பணி தொடங்கியதும், அதை தொடர்ந்து கோயில் கோபுரங்கள், மற்ற பிரகாரங்களையும் கும்பாபிஷேகத்திற்காக பழமை மாறாமல் பெயிண்டிங் அடிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT