Published : 25 Jun 2019 05:27 PM
Last Updated : 25 Jun 2019 05:27 PM

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் நீண்ட இரட்டை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வி நீண்ட இரட்டை செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்த அகழாய்வு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாம், மற்றும் இரண்டாம் ஆண்டுகள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கண்டெடுக்கப்பட்ட இரு பொருட்களை அமெரிக்காவில் கார்பன் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி பரிசோதித்தில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான நகர, நாகரிகம் எனத் தெரியவந்தது.

மேலும் சில பொருட்களை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பும் பட்சத்தில் இன்னும் சில நூறாண்டுகள் தள்ளிப்போகும் எனவும், இம்முடிவுகள் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபணமாகும் பட்சத்தில் தமிழர்களின் புதிய வரலாறு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்த அகழாய்வை கைவிடும் நிலையில் மத்திய அரசு இருந்ததால் மக்களவையில் குரல் எழுப்பப்பட்டன. பின்னர் கண்காணிப்பாளராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். அதிலும் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன.

இதனிடையே, 3 ஆண்டுகள் அகழாய்வோடு மத்திய அரசு கைவிட்டது. பின்னர் 4ம் கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டது.

தற்போது 5-ம் கட்ட அகழாய்வினையும் தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியலாளர்கள் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்தாம் கட்ட அகழாய்வுக்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  கடந்த 13-ம் தேதி 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் துவக்கிவைத்தார்.

கடந்த 10 நாட்களாக நடந்த அகழாய்வில் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், இன்று நடந்த அகழாய்வில் பழங்கால செங்கற்சுவர்கள் கண்டறியப்பட்டன. இவை ஏற்கெனவே கிடைத்த சுவர்களின் தொடர்ச்சியாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இது மிக நீளமான செங்கல் சுவராக இருக்கிறது.

செயற்கைக்கோள் உதவியுடன் தொல்லியல் மேடுகள் கண்டறிந்து நடக்கும் ஆய்வு என்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்ப்பில் அகழாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x