Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்; 13 லட்சம் பேர் ஆதரவை பெற தொழிற்சங்கங்களிடையே போட்டி: ரயில்வே ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள், அதற்கான தீர்வுகளை முன்வைத்து பிரச்சாரம்

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை, வரும் ஆகஸ்ட்டில் நடத்த வாரியம் அறிவித்துள்ளதால், நாடுமுழுவதும் 13 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற தொழிற்சங்கங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்தது. பதிவாகும் மொத்த வாக்குகளில் 30 சதவீதம் பெறும் தொழிற்சங்கம் மட்டுமே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்படும். வெற்றி பெறும் தொழிற்சங்கங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அங்கீகாரம் பெறும்தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும்.

இந்நிலையில், 3-வது முறையாக ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் ஆகஸ்ட்டில் நடத்தவுள்ளதாக ரயில்வேவாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கிடையே, ரயில்வேயின் கீழ்உள்ள 17 மண்டலங்களிலும் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களின்ஆதரவைப் பெற அகில இந்தியரயில்வே ஊழியர்கள் சம்மேளனம் (ஏஐஆர்எப்) தலைமையில் ஓர் அணியும், தேசிய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு (என்எப்ஐஆர்) மற்றொரு அணியாகவும் செயல்பட தொடங்கிவிட்டன.

இதில், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ரயில்வே மண்டலங்களில் பணியாற்றி வருகின்றன. தெற்கு ரயில்வேயில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு), தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம் (டிஆர்இயு) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுதொடர்பாக அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளன செயல் தலைவரும், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளருமான என்.கண்ணையா கூறும்போது, ‘‘ரயில்வே ஊழியர்களுக்கு நாங்கள் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளோம்.

குறிப்பாக, ரயில்வே ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பெற்று வந்த அகவிலைப்படியை 2 முறையாகப் பெற்றுத் தந்தது எங்கள் சங்கம்தான். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பதவிஉயர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகளை நலச் சங்கங்கள் மூலம் செய்து வருகிறோம்.

ரயில்வே தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது சாதனைகளை ரயில்வே ஊழியர்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். எனவே, இந்த அங்கீகாரத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

இதுதொடர்பாக டிஆர்இயூ சங்கத்தின் உதவி தலைவர் ஆர்.இளங்கோவன் கூறும்போது, ‘‘ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவுள்ளது. ஆனால், இந்தத்தேர்தல் முறையை மாற்றியமைக்கும் வகையிலும் சில நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைக்கப்படவுள்ளது. இதில், பாஜகவின் பாரதிய ரயில்வே மஸ்தூர் சங்கத்துக்கு ஆதரவாக சில மாற்றங்களைக் கொண்டு வருமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள ரயில்வே ஊழியர்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துபிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். தற்போது அங்கீகாரத்தில் இருப்போரின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறோம். தொழிலாளர்களிடம் எங்களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது’’ என்றார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘அங்கீகாரத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த ரயில்வே துறை அல்லாமல், தொழிலாளர் நலத் துறை நடத்தவேண்டும். போட்டியிடும் எல்லாதொழிற்சங்கங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x