Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM

ஸ்மார்ட் அட்டையுடன் மாணவர்களின் இலவச பஸ் பாஸ் ஒருங்கிணைக்கப்படுமா?- சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை என அதிகாரி தகவல்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளுக்கு பள்ளி மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளிடம் பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதிய பஸ் பாஸ் வழங்க சுமார் 2 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து மாணவர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அனுமதிக்கலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் பள்ளிகள் திறப்பின்போது, இந்த புகார் தொடர் கதையாக இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து இதற்கான பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே, இந்த ஸ்மார்ட் அட்டையுடன் இலவச பஸ் பாஸும் ஒருங்கிணைக்கப்பட்டால், பாஸுக்கு என தனியாக பணியை மேற்கொள்ள தேவையில்லை. மாணவர்கள் சிரமம் இன்றி பஸ் பாஸ் சேவையைப் பெற முடியும்.

தனியாக அட்டை வேண்டாம்

இதுதொடர்பாக போக்குவரத்து அலுவலர்கள் சிலர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் பள்ளிகள் திறப்பின்போது பஸ் பாஸ் தயாரிப்பு பணி என்பது முக்கியமானதாக இருக்கிறது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விவரங்களை சேகரித்து, அதன்பிறகு, டெண்டர் விட்டு பஸ் பாஸ் வழங்க தாமதம் ஏற்படுகிறது.

எனவே, மாணவர்களுக்கு புதியதாக வழங்கவுள்ள ஸ்மார்ட் அட்டையுடன் பஸ் பாஸுக்கான அட்டையையும் ஒருங்கிணைத்துவிட்டால், பஸ் பாஸுக்கு என தனியாக அட்டை வழங்க வேண்டியதில்லை. போக்குவரத்து கழகங்களுக்கு பணிப் பளு குறையும். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2, ஐடிஐ, அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பள்ளி, கல்லூரிக்குச் சென்று வரும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்க ரூ.1.90 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் வழங்கப்படவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள ஸ்மார்ட் அட்டையுடன் பஸ் பாஸும்ஒருங்கிணைந்து வழங்குவது குறித்து ஐஆர்டி (சாலை போக்குவரத்து நிறுவனம்), பள்ளிக் கல்வித் துறையுடன்பேச்சுவார்த்தை நடத்தி, இத்திட்டம்செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x