Published : 13 Jun 2019 09:20 PM
Last Updated : 13 Jun 2019 09:20 PM

ஜூன் 14-ல் டிஜிபி ஓய்வு இல்லை: ஜூன்.30-ல் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வு

டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நாளை ஓய்வு இல்லை என தெரியவந்துள்ளது. புதிய டிஜிபி ஜூன் 30-ல் பதவி ஏற்கிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரன் நாளையுடன் பணி ஓய்வு பெறுவதாகவும், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி நாளை பதவி ஏற்பதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறும் நாளில் புதிய டிஜிபி பதவி ஏற்பார் என தகவல் தெரிவித்தனர்.  பிறந்த நாளைக் கணக்கில் கொண்டு சமூக வலைதளங்களில் டி.கே.ராஜேந்திரன் நாளை ஓய்வு அதனால் புதிய டிஜிபி நாளை பதவி ஏற்பார் என்கிற கருத்து பரப்பப்படுகிறது.

நீதிபதிகளுக்கு மட்டுமே அவர்கள் பிறந்த நாளுக்கு முன் தினம் ஓய்வு நாளாக கருதப்படும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு பணி ஓய்வு அவர்கள் பணி நிறைவடையும் மாதத்தின் இறுதி நாள். அந்த வகையில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவி ஏற்றார்.

2 ஆண்டுகள் பதவி என்கிற வகையில் அவர் பணி ஓய்வு வரும் ஜூன் 30-ம் தேதி ஆகும். அவரது பணி ஓய்வு பெறும் நாளுக்கு முன்னர் மத்திய தேர்வாணையம் 3 சீனியர் டிஜிபிக்களின் பட்டியலை அனுப்பும்.

அதில் ஒருவரை அரசு தேர்வு செய்யும். அவர் ஜூன் 30-ம் தேதி மதியம் 12 மணிக்கு பதவி ஏற்பார். தற்போதுள்ள விதிப்படி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்பவர்கள் பணிக்காலம் அடுத்து 2 ஆண்டுகள் ஆகும். இதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அளித்த வழிகாட்டுதல் உத்தரவுப்படி தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு பணி ஏற்கும் நாளிலிருந்து ஆறுமாத காலம் பதவிக்காலம் இருக்க வேண்டும் ( அதாவது ஜனவரி 2020 குறைந்தப்பட்சம்).

அவ்வாறு தகுதி உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல்

1. சங்கர்ராம் ஜாங்கிட்     (ஆகஸ்ட்-2019-ல் ஓய்வு)-     85- பேட்ச் தகுதியில்லை

2. ஜே.கே.திரிபாதி           (மே.2020-ல் ஓய்வு)               85   பேட்ச்- தகுதியில்  1-ம் இடம்

3. சி.கே. காந்திராஜன்      (அக்டோபர்-2019-ல் ஓய்வு) 85- பேட்ச் தகுதியில்லை

4. எம்.எஸ். ஜாஃபர் சேட் ( டிசம்பர்_2020-ல் ஓய்வு)      86- பேட்ச் தகுதியில்   2-ம் இடம்

5. லட்சுமி பிரசாத்             (மே.2020-ல் ஓய்வு)               86- பேட்ச் - தகுதியில் 3-ம் இடம்

6. அசுதோஷ் சுக்லா        (ஜனவரி-2021-ல் ஓய்வு)        86- பேட்ச் தகுதியில்   4-ம் இடம்

7. மிதிலேஷ்குமார் ஜா    (ஜூலை- 2021-ல் ஓய்வு)       86- பேட்ச் தகுதியில்    5-ம் இடம்

8. என். தமிழ்ச்செல்வன்   (மே.2021- ல் ஓய்வு)               86-பேட்ச் தகுதியில்     6-ம் இடம்

மேற்கண்ட 8 பேரில் ஜாங்கிட் மற்றும் காந்திராஜனுக்கு 6 மாத சர்வீஸ் இல்லாததால் தகுதியில்லாதவர்களாகிறார்கள். மீதமுள்ள 6 பேரின் பட்டியலும், அவர்கள் குறித்த பணி திறன் மற்றும் நடத்தை குறித்த பட்டியல் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பப் படும்.

அதில் தகுதியான எவ்வித பணிக்கால தண்டனைகள், இடைநீக்கம், வேறு பணி சார்ந்த ஒழுங்கீன நடவடிக்கைகளுக்கு ஆட்படாத முதல் 3 தகுதியான அதிகாரிகளின் பட்டியலை தேர்வு செய்யும் மத்திய தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அதை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும்.

அதிலிருந்து விருப்பப்பட்ட ஒருவரை மாநில அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும். அவ்வாறு பொறுப்பேற்பவர் அடுத்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார். இதற்கான பதவியேற்பு வரும் 30-ம் தேதி மதியம் நடக்கும்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x