Published : 08 Jun 2019 12:00 AM
Last Updated : 08 Jun 2019 12:00 AM
வெயில் காலத்தில் செல்லப் பிராணிகளை பாதுகாப்பது குறித்து கால்நடை மருத்துவர் எஸ்.சரவணன்சில வழிமுறைகளை கூறியுள்ளார். தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலானோர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தர்பூசணி, இளநீர், மோர்உள்ளிட்ட குளிர்ச்சி தரும்பழங்கள், பானங்களை உட்கொள்கின்றனர். பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வெயில் காலங்களில் குழந்தைகள் மற்றும் முதியோர் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகும் நிலைஏற்பட்டு விடுகிறது. மனிதர்களுக்கே இப்படி என்றால், கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் நிலையோ மிகவும் பரிதாபமானது. வெயில் தாக்கம் காரணமாக கடும் பாதிப்புகளை அவை சந்திக்கின்றன.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வீடுகளில் வளர்ப்பவர்களுக்கு வெயிலில் இருந்து அவைகளைப் பாதுகாப்பது பெரியசவாலாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய், பூனை உள்ளிட்டசெல்லப் பிராணிகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
‘ஹீட்ஸ்ட்ரோக்'
வெயில் காலங்களில் ‘ஹீட்ஸ்ட்ரோக்' என்ற நோயினால் செல்ல பிராணிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், போதிய புள்ளி விவரங்கள் இல்லாததால் வெளியில் தெரிவதில்லை.
இந்நோயில் இருந்து செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை மருத்துவர் எஸ்.சரவணன் கூறியதாவது:மனிதர்களுக்கு வியர்வைச் சுரப்பி உள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, உடல் குளிர்ச்சியடைய வியர்க்கும். இதனால், உடலில் வெப்பம் குறையும். ஆனால், செல்ல பிராணிகளான நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு வியர்வை சுரப்பி கிடையாது. இதனால், வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்க முடியாது.
ஏசி, ஏர்கூலர்
எனவே, அவைகள் வாய் வழியாக மூச்சை விட்டு உடல் உஷ்ணத்தைக் குறைக்கின்றன. இருப்பினும் ஓரளவுதான் உஷ்ணத்தைக் குறைக்க முடியும். வெளியில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிக்கும்போது, வீட்டுக்குள் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக் கூடும். இதனால் செல்ல பிராணிகளுக்கு நிறைய உபாதைகள் வரும். அதைத் தடுக்க ஏசி, ஏர்கூலரில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த வசதி இல்லாதவர்கள் ஈரத் துணியை செல்ல பிராணிகள் மீது போர்த்தி விடலாம். மேலும், குளிர்ந்த தண்ணீரை செல்ல பிராணிகள் மீதுதெளித்து விடுதல், மற்றும் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து உருண்டையாக கொடுப்பதன் மூலமும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு செய்யத் தவறினால், ‘ஹீட் ஸ்ட்ரோக்'கால் பிராணிகள் தாக்கப்படலாம். மனிதனைவிட செல்ல பிராணிகளுக்கு இந்நோய் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதன் அறிகுறியாக முதலில் மூக்கில் இருந்து ரத்தம் வரும். அதற்கடுத்து, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழக்கும். அதன்பிறகு, அவற்றைக் காப்பற்றுவது சிரமம். செல்லப் பிராணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளைக் கொடுக்கக் கூடாது. நாய்களுக்கு தயிர்சாதம். நெய் கலந்த பருப்பு சாதம் கொடுக்கலாம். பூனைக்கு மீன் கலந்தசாதம் கொடுக்கலாம். ‘ஹீட் ஸ்ட்ரோக்கால்’ அதிக எண்ணிக்கையில் செல்லபிராணிகள் ஒவ்வொரு ஆண்டும் இறந்தாலும் அதற்கான புள்ளி விவரங்கள் நம்மிடம் இல்லை. அந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டால் செல்லப் பிராணிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்.
இவ்வாறு கால்நடை மருத்துவர் எஸ்.சரவணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT