Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
மேய்ச்சல் நிலமின்றி அழிந்து வருகின்றன, மலைக் கொங்கு மாடுகள். 2002-ல் 2.5 லட்சம் எண்ணிக்கையில் இருந்த மாடுகள், 2019-ல் 600-ஆக குறைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, விராலியூர், நரசீபுரம், வெள்ளிமலை பட்டணம், பெருமாள் கோயில் பதி உள்ளிட்ட 18 கிராம மக்களுக்கு விவசாயமும், மலைக் கொங்கு இன மாடுகளை மேய்த்தலுமே வாழ்வாதாரம்.
தங்கள் குடும்ப உறுப்பினரைபோல வளர்த்து வரும் மலைக் கொங்கு மாடுகள் வேகமாக அழிந்து வருவது இப்பகுதி மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.
“பல தலைமுறைகளாக காடுகளிலும், மலைகளிலும் எங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வந்தோம். இதன்மூலம் தூய்மையான பால், அதிலிருந்து தயிர், மோர் தயாரித்து விற்பனை செய்தோம்.
கறவைப் பால் விற்பனை கிராம மக்களுக்கு வருமானத்தை ஈட்டித் தந்தன. வனப்பகுதிக்குள் மலைக் கொங்கு மாடுகள் மேய்ந்தபோது அவற்றின் சாணம், கோமியம் போன்றவை மரம், செடி, கொடிகளுக்கு இயற்கை உரமாக கிடைத்தன.
இதனால் காடுகள் வளமாகவும், பசுமையாகவும் காட்சியளித் தன. மழைப்பொழிவும் அதிகமாக இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைத்தது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக வனப் பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதியில் லாததால், மலைக் கொங்கு மாட்டு இனத்தின் பெரும்பகுதி அழிந்து விட்டது” என்று வேதனை தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.
இது குறித்து மாதம்பட்டி கொங்கு பட்டீஸ்வரன் கோசாலை உரிமையாளர் தி.சண்முகம் கூறியதாவது:
வனப் பகுதிகளில் மலைக் கொங்கு மாடுகளை மேய்ப்பதற்கு, உரிமையாளர்களுக்கு வனத்துறை யால் ‘பட்டி பாஸ்’ எனப்படும் அனுமதி அட்டை வழங்கப்பட்டு, மாட்டுக்கு ரூ.5 வீதம் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு வனப்பகுதியில் மாடுகள் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப் பட்டு, பட்டி பாஸ் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. மேய்ச்சல் வசதி, உணவின்றி மலைக் கொங்கு மாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கின. வனத்துறையின் கெடுபிடியால் விவசாயிகள் மாடுகளை விற்கவும் தொடங்கினர்.
இதன் விளைவாக 2.5 லட்சமாக காணப்பட்ட மலைக் கொங்கு மாடுகளின் எண்ணிக்கை, 2 லட்சம், 1.5 லட்சம் என குறையத் தொடங்கி, தற்போது 600 மாடுகள் மட்டுமே உள்ளன. கடந்த 17 ஆண்டுகளில் 90-95 சதவீதம் மாடுகள் மேய்ச்சல் நிலமின்றி அழிந்து விட்டன.
இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அழிவின் விளிம்பின் உள்ள இவ்வின மாடுகளை பாதுகாக்க மீண்டும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நோய் எதிர்ப்பு சக்தி
“மலைக் கொங்கு மாடுகள் பார்ப்பதற்கு சிறியதாகவும், அழகாகவும் காணப்படும். தட்ப, வெப்ப சூழ்நிலைகளைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுவதால், மற்ற கால்நடைகளைப் போல மருத்துவ சிகிச்சை எதுவும் தேவைப்படாது. இவற்றின் சாணம் மற்றும் கோமியத்தின் மூலமாக இயற்கை உரம், பஞ்ச காவ்யா தயாரிக்க முடியும். எனவே இவ்வின மாடுகளை காப்பாற்றி, எண்ணிக்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்பார்க்கின்றனர், கிராம மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT