Last Updated : 16 Jun, 2019 04:43 PM

 

Published : 16 Jun 2019 04:43 PM
Last Updated : 16 Jun 2019 04:43 PM

கேரளத்தில் பணிபுரிந்து காய்ச்சலுடன் ஜிப்மரில் அனுமதிப்பட்டவர் மரணம்

கேரளத்தில் பணிபுரிந்து காய்ச்சலுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மரணமடைந்தார்.

கடலூரை சார்ந்தவர் நடராஜன் (55). கேரள மாநிலம் திருச்சூரில் பணிபுரிந்து வந்தார். அங்கேயே அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் அவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  பின்னர் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் 8ம் தேதி அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 9ம் தேதி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கேரளத்தில் இருந்து கடுமையான காய்ச்சலுடன் வந்ததால் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நிபா வைரசுக்கு என்று உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக புனே மத்திய அரசு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து வெள்ளியன்று ஆய்வு முடிவுகள் வந்தது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தோற்று இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் உடல் நிலை சீராகும் வரை அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

இச்சூழலில் இன்று காலை நடராஜன் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜிப்மர், சுகாதாரத்துறை தரப்பில் கேட்டதற்கு,  மூளை காய்ச்சலுடன் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் புதுச்சேரியில் ஜிப்மர், அரசு பொது மருத்துவமனை என இரு இடங்களில் சிறப்பு வார்டுகள் அமைத்து போதிய சாதனங்கள் அங்கு பணிபுரிவோருக்கு தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x