Published : 02 Jun 2019 10:40 AM
Last Updated : 02 Jun 2019 10:40 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 19 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு இந்த ஆண்டு கோடைக் காலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த 5 மாதங்களில் 105 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 815 மி.மீ. ஆகும். இதில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் சராசரியாக 110 மி.மீ. மழை கிடைக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 486 மி.மீ. மழை கிடைக்கும்.
கோடைக் காலம் மற்றும் முன் கோடைக் காலமான ஜனவரி முதல் மே மாதம் வரை சராசரியாக 219 மி.மீ. மழை கிடைக்கும். 2008-ம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை மிக அதிகபட்சமாக 618 மி.மீ. மழை கிடைத்தது. இது ஆண்டு சராசரி மழை அளவில் சுமார் 76 சதவீதம் ஆகும்.
குறைவான மழை
கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத் தில் கடும் வறட்சி நிலவியது. அந்த ஆண்டு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் 396.95 மி.மீ. மழை மட்டுமே கிடைத்தது. இதில் முன் கோடை மற்றும் கோடைக் காலத்தில் 116.27 மி.மீ. மழை கிடைத்தது. 2010-ம் ஆண்டில் இந்த கால கட்டங்களில் 118.03 மி.மீ. மழை கிடைத்தது.
ஆனால், இந்த ஆண்டில் கடந்த 5 மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் 105 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது, கடந்த 19 ஆண்டு கால வரலாற்றில் கண்டிராத அளவுக்கு குறைவான மழைப் பதிவு ஆகும். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தமிழ கத்தில் குறைவாக பெய்தாலும் திருநெ ல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட சற்று கூடுதலாக பெய்தது. இதனால், அணைகள், குளங்கள் நிரம்பின. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்றன.
8 அணைகள் வறண்டன
இந்நிலையில், கடந்த 5 மாதமாக மழை ஏமாற்றம் அளிப்பதால், மாவட் டத்தில் உள்ள 11 அணைகளில் 8 அணைகள் வறண்டு விட்டன. சேர் வலாறு, மணிமுத்தாறு, நம்பியாறு ஆகிய அணைகளில் மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. மணிமுத்தாறு அணை நீரைக்கொண்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தாவரங்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால், மலைப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் குற்றாலம் மலைப் பகுதி, புளியங்குடி அருகே உள்ள செல்லுப்புளி பீட் பகுதி, களக்காடு அருகே உள்ள வெள்ளிமலைப் பகுதி ஆகிய இடங்களில் காட்டுத் தீயில் ஏராளமான தாவரங்கள் சாம்பலாகின. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
வன விலங்குகள் பரிதவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் வன விலங்குகளும் குடிநீருக்காக அலைந்து திரிகின்றன. யானைகள் காட்டை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தண்ணீரின்றி விலங்குகள் உயிரிழக்கும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் வறட்சி அதிகரித்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழையும் தாமதமாகி வருகிறது. வறட்சியின் பிடியில் இருந்து மீள தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து மக்களும், விவசாயிகளும் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT