Published : 10 Jun 2019 07:37 PM
Last Updated : 10 Jun 2019 07:37 PM

கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது?- பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி

அண்டை மாநிலங்கள்போல் அரசாங்கப் பள்ளியில் பயில்வதை ஊக்குவிக்கவேண்டும், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது, எதை வைத்து தீர்மானிக்கிறார்கள் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பினார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்கும் திட்டத்தில் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இந்த ஆண்டு பாதியாகக் குறைத்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையில் ஏன் இந்த மாறுபாடு?

எது குறைவோ அதைத்தான் கொடுக்கமுடியும். அரசாங்கம் ஒரு குழந்தைக்கு எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அந்தக் கட்டணம், அல்லது அரசு தனியார் பள்ளிக்கு ஒதுக்க உத்தேசித்துள்ள கட்டணம் இதில் எது குறைவோ அதைக் கொடுப்பார்கள்.

முன்பு 25 ஆயிரம் கொடுத்த இடத்தில் இப்போது 11 ஆயிரத்து சொச்சம் என குறைக்கப்பட்டுள்ளதே?

அது பிரச்சினை இல்லை. அப்படி குறைக்கப்பட்டதில் சட்டத்தைப் பின்பற்றினார்களா? இல்லையா என்பதே கேள்வி. எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள், இஷ்டத்துக்கு பாதியாகக் குறைப்பதெல்லாம் கிடையாது. அரசாங்கம் ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகை, அல்லது ஒரு பள்ளிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளார்களோ இதில் எது குறைவோ அதைத்தான் கொடுப்பார்கள்.

அந்த அடிப்படையில் கொடுத்துள்ளார்களா? இந்த விதிக்கு உட்பட்டுத்தான் நிர்ணயித்துள்ளார்களா? என அரசைத்தான் நீங்கள் கேட்கவேண்டும்.

இது துணி வியாபாரமோ, நகை வியாபாரமோ கிடையாது. இவ்வளவு டிஸ்கவுண்ட் சேல் என சொல்வதற்கு.

இந்த ஆண்டு குறைத்துக் கொடுக்கும் தொகை சரியான தொகையா?

இந்த வருடம் எவ்வளவு செலவு என்கிற அடிப்படையை எதை வைத்து தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்கிறேன். நான் ஏற்கெனவே கூறியதுபோல் அரசாங்கம் ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகை, அல்லது ஒரு பள்ளிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளார்களோ இதில் எது குறைவோ அதைத்தான் கொடுப்பார்கள். இதுதான் அரசு விதி.

இதன் அடிப்படையில்தான் கொடுத்துள்ளார்களா? என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.

மற்ற மாநிலங்களில் எப்படி உள்ளது?

அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, இருக்குமேயானால் அதில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளியில் சேர்த்தால் அரசு உதவி செய்யாது எனச் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவந்துள்ளார்கள். அது சரி என நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

கேரளாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட 40 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.

இதில் சரியான விஷயம் எது?

கேரளா, கர்நாடக விஷயங்களை கணக்கில் எடுத்து நமது அரசாங்கமும் ஏன் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்காமல் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கிறது. தனியார் பள்ளிக்கு மாணவர்களைச் சேர்த்து ஏன் தனியார் பள்ளிகளுக்கு அரசு வரிப்பணத்தை கொட்டிக்கொடுக்கிறது என்ற கேள்வியைத்தான் நாம் எழுப்ப வேண்டும்.

ஆகவே பணத்தை பாதியாகக் குறைத்துவிட்டார்கள் என்றெல்லாம் கவலைப்படவேண்டியது தனியார் பள்ளிகள்தான். தங்களுக்குத் தேவை என்றால் அவர்கள் அரசைக் கேட்டுக் கொள்ளட்டும். நாம் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பது பற்றி கோரிக்கை வைப்போம்.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x