Published : 25 Jun 2019 01:17 PM
Last Updated : 25 Jun 2019 01:17 PM
புதுச்சேரி அரசு பொது நிறுவனங்களிலிருந்து அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களை அமைச்சர்கள் வாங்குவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 12 அரசு நிறுவனங்களில் 2 மட்டுமே தகவல் தந்துள்ள நிலையில் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு வாரியம், முகமை, கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 மாதம் முதல் 50 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு அங்கு நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகளே காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அரசு பொது நிறுவனங்கள் செலவு செய்வது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கோரியிருந்தார். அதில் கிடைத்த தகவல்களை முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி ஆகியோரிடம் அளித்தார்.
இதுதொடர்பாக ரகுபதி கூறுகையில், "புதுச்சேரியில் அமைச்சர்கள் தங்களின் அலுவலகத் தேவைக்கான பொருட்களை தாங்கள் பதவி வகித்து வரும் துறை சார்ந்த அரசு பொது நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிடம் வாங்கி வருகின்றனர். இதுகுறித்து தகவல் கேட்டதற்கு பல நிறுவனங்கள் தரவில்லை. இரு நிறுவனங்கள் தகவல் தந்துள்ளனர்.
அதன்படி வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் அலுவலகத்துக்கு பிப்டிக் நிறுவனமானது எழுதுபொருட்கள், இருக்கைகள், எலக்ட்ரானிக் ஸ்டவ், ஏணி உள்ளிட்ட சாதனங்களை ரூ. 3.16 லட்சத்துக்கு வாங்கித் தந்ததாக தகவல் தந்துள்ளனர்.
அதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு நான்கு மாதங்களுக்கு பாட்கோ நிறுவனம் டீ வாங்கி தர ரூ.15,980 செலவு செய்துள்ளதாக தகவல் தந்துள்ளது.
அமைச்சர்கள் அலுவலகப் பொருட்களை அமைச்சரவைச் செயலகம்தான் வாங்கித் தரும். அரசு பொது நிறுவனங்கள் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. இதில் நடவடிக்கை தேவை" என்று கூறினார்.
இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்", என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT