Published : 06 Jun 2019 04:29 PM
Last Updated : 06 Jun 2019 04:29 PM

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பள்ளி திறந்த மறுநாளே நான்கு அரசுப் பள்ளிகள் மூடல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் நான்கு அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த மறுதினமே மூடப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 153 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், அரசுப்பள்ளிகளில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகளின் குழந்தைகளின் கல்வி தேவையை அரசுப் பள்ளிகள் தான் பூர்த்தி செய்கின்றன.

நடப்பு கல்வியாண்டுக்காக விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் பள்ளிகள் திறந்த மறு தினமே 4 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டதாக வெளியான தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட இடுஹட்டி உயர்நிலைப்பள்ளி, கீழூர் கோக்கலாடா, பந்துமி மற்றும் தேவிவியூ ஆகிய பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், இப்பள்ளிகளில் பணிபுரிந்து ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், அப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களை வலியுறுத்தி வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.நாசருதீன் தெரிவித்தார்.

அவரிடம் பள்ளிகளின் நிலைக்கு குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது: குன்னூர் வட்டத்தில் இடுஹட்டி உயர்நிலைப்பள்ளி, கீழூர் கோக்கலாடா உயர்நிலைப்பள்ளி, பந்துமி தொடக்கப்பள்ளி மற்றும் தேவிவியூ தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. இதனால், ஆசிரியர்கள் டெபுடேஷனில் வேறு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கீழுர் கோக்கலாடாப்பள்ளியில் 3-4 மாணவர்கள் தான் இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர் சேர்ந்துள்ளனர்.

இடுஹட்டிப்பள்ளிக்கு அருகேயுள்ள தூனேரி மாதிரி பள்ளியில் மாணவர்கள் பெற்றோர் சேர்த்துள்ளனர். பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கவில்லை. அரசுப்பள்ளிகளில் தான் சேர்த்துள்ளனர்.

தூனேரி பள்ளி ரூ.50 லட்சம் செலவில் மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இப்பள்ளியில் கட்டிட வசதி, ஸ்மார்ட் கிளாஸ், ஆய்வகம் என தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுகிறது. எனவே, பெற்றோர் ஆர்வத்தில், இப்பள்ளியில் மாணவர்கள் சேர்த்துள்ளனர்.

பந்துமி தொடக்கப்பள்ளி, தேவிவியூ கடந்தாண்டே ஓரிரு மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில், இப்பள்ளிகளை மூடும் எண்ணம் கல்வித்துறைக்கு இல்லை. மாணவர்களை சேர்க்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கை இருந்தால், மீண்டும் இப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x