Published : 23 Jun 2019 12:00 AM
Last Updated : 23 Jun 2019 12:00 AM
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.20 கோடி செலவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்கள் தடகளம், நீச்சல், வீல் சேர் டென்னிஸ், வீல் சேர் கால்பந்து உள்ளிட்ட 13 வகையான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
மாவட்டத்துக்கு ஒன்று வீதம்
மாவட்டத்துக்கு ஒன்று வீதம் தமிழகம் முழுவதும் 30-க்கும்மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளன. இவற்றில், சாதாரண நபர்களும் மாற்றுத்திற னாளிகளும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச தரத்தில் தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனியாக விளையாட்டு மைதா னத்தை உருவாக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக எதிர்கொள்பவர்களாக உருவாக்குவதை முக்கிய நோக்கமாக வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தனி விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்
ரூ.20 கோடி செலவில் 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்தில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், நீச்சல் குளம், கூடைப்பந்து உட்பட மாற்றுத்திறனாளிகள் விளையாடும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்பயிற்சி கூடம், கழிப்பறை, சாய்வுதளம், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கி பயிற்சி எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கான தங்கும் அறை, சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
சிறந்த பயிற்சியாளர்கள்
திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் மைதானத்தை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு பின்னர் இடம் முடிவு செய்யப்படும்.
இந்த மைதானம் அமைந்தவுடன் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்கக் கூடிய சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் சாதாரண நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி எடுக்கும் வகையில் பல்வேறு மைதானங்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக மைதானம் அமைய உள்ளது இதுதான் முதல்முறை.
இவ்வாறு தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT