Last Updated : 30 Sep, 2014 09:23 AM

 

Published : 30 Sep 2014 09:23 AM
Last Updated : 30 Sep 2014 09:23 AM

பேஸ்புக், ட்விட்டரில் தமிழக சுற்றுலாத்தல விவரங்கள்: சுற்றுலா பிரியர்களைக் கவர தீவிர முயற்சி

சுற்றுலா பிரியர்களை கவரும் விதமாக தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்களை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

சுற்றுலாவின் மூலம் அதிக வருவாய் ஈட்டக் கூடிய மாநிலங்களில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரை, மலைப் பிரதேசங்கள், பாரம்பரியமிக்க கோயில்கள், கலை நயம்மிக்க சிற்பங்கள் என பல்வேறு வகையான சுற்றுலா அம்சங்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளன. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு விரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 24 கோடியே 82 லட்சம் பேர் இங்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபலமற்ற சுற்றுலாத் தலங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, தமிழ்நாடு சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி தமிழக சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கருத்துகளும் தகவல்களும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில அறியப்படாத சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டே பேஸ்புக்கில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் அதிக விவரங்கள் கிடையாது. எனவே, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முக்கிய மற்றும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை விவரிக்கும்படியான, பக்கத்தை உருவாக்கவுள்ளோம். சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலங்களில் புகைப்படம், அதன் அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவை இதில் இடம்பெறவுள்ளன.

தமிழகத்திலுள்ள சுற்றுலா குறித்து கண்காட்சிகள் நடத்தியோ, ஒருவரை தேடிச் சென்றோ கூறுவதைக் காட்டிலும், இப்படி சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும்போது அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழக சுற்றுலாத் தலங்கள் பற்றிய பக்கத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பராமரிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x