Published : 12 Jun 2019 08:00 PM
Last Updated : 12 Jun 2019 08:00 PM
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மத்திய தர நிர்ணயக் குழுவினர் இறுதி ஆய்வு இன்று நடத்தினர். அரசு மருத்துவமனையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததால் தேசிய தர நிர்ணயச் சான்று கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தரம், செயல்பாடு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி தேசிய தர நிர்ணயச் சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்தகைய சான்றுகள் பெறும் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை மற்றும் இதர வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படும்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு ஆண்டாக பல கட்டங்களாக மத்திய ஆய்வுக்குழுவினர் அரசு மருத்துவமனையில் செயல்பாடு, வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள 13 துறைகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இறுதிக்கட்ட ஆய்வு இன்று நடந்தது.
அனுசர்மா (டெல்லி), சரத்குமார் ராவ் (மங்களூர்), தேவேந்திர குமார் குர்ஜார் (சத்தீஸ்கர்) ஆகியோர் கொண்ட மத்திய ஆய்வுக் குழுவினர் கடந்த 10-ம் தேதி முதல் இறுதிக்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர்.
3 கட்டங்களாக நடந்த ஆய்வு இன்றுடன் முடிவுக்கு வந்தது. அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் தேர்வுக்குழுவின் விதிகளுக்குட்பட்ட அனைத்து வசதிகளும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இடம் பெற்றிருந்தது. இதனால் இறுதிக்கட்ட ஆய்வு முடிந்து அவர்கள் திருப்தியுடன் திரும்பினர்.
இதனால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணயச் சான்று கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் செல்வகுமார், தமிழ்நாடு தர நிர்ணய ஆய்வாளர் சிவகுமார், திருப்பத்தூர் மருத்துவமனை மருத்துவர் சிவா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ரூ.25 லட்சம் கூடுதலாக கிடைக்கும்
இத்திட்டத்தின் கீழ் தேசிய தர நிர்ணயச் சான்று பெறும் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு படுக்கைக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் கூடுதல் நிதி வழங்கப்படும். அதன் படி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் இருப்பதால் 3 ஆண்டுகளுக்கு 25 லட்ச ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகையாகப் பெற வழிவகை கிடைத்துள்ளது.
இந்தத் தொகையை அரசு மருத்துவமனையின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகையாக, வழங்க முடியும்.
தமிழகத்தில் முதல் கட்டமாக திருப்பத்தூர், ஸ்ரீரங்கம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வுக்குழுவின் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT