Published : 13 Jun 2019 11:06 AM
Last Updated : 13 Jun 2019 11:06 AM
அமெரிக்காவில் நடக்க உள்ள கீழடி கண்காட்சி தமிழ்சங்க விழாவுக்கு செல்ல கீழடி அகழாய்வு தொல்லியல்துறை கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவது, தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கீழடி அகழாய்வை, தொல்லியல்துறை கண்காணிப்பாளராக இருந்து வழி நடத்தியவர் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மண்ணின் மைந்தரான அமர்நாத் ராமகிருஷ்ணா.
அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்கள் மற்றும் சின்னங்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் தொன்மை கிமு 2 - 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக அறியப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டாம் கட்ட அகழாய்வில் அங்கு மிகப்பெரும் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான கட்டிடங்களும் கண்டறியப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்பு இது உலக அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் கீழடி அகழாய்வின் பக்கம் உலக தொல்லியல் ஆய்வாளர்களின் பார்வை திரும்பியது. கீழடி கிராமத்தில் நடைபெற்ற ஆய்வின்போது பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் தினமும், அகழாய்வை பார்வையிடுவதற்கு சிறப்பு அனுமதியை அமர்நாத் ராமகிருஷ்ணன் வழங்கியிருந்தார். இதனால் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் எதிர்கால சந்ததியினருக்கும், வெளியுலகிற்கு தெரிய வந்தது.
இந்நிலையில் 3-ஆம் கட்ட அகழாய்வின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியநிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் கீழடியில் பணியமர்த்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 3 வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்கமான பெட்னா 2018 நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டார்.
அந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்தது. அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வரும் ஜூலை 4, 5, 6, 7-ஆம் தேதிகளில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் ‘பெட்னா 2019' நிகழ்வில் 'கீழடி நம் தாய்மடி' என்ற தலைப்பில் காட்சியகம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர். இக் குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஃபெட்னா நிர்வாகிகள் அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு இந்த ஆண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி அமர்நாத் ராமகிருஷ்ணா இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை அனுமதித்தோ அல்லது அனுமதி மறுத்தோ எந்தவித பதிலும் தராமல் இழுத்தடித்து வருவதாக மத்திய தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர்,
அமர்நாத் ராமகிருஷ்ணா அமெரிக்காவுக்கு சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க உதவி செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கீழடி அகழாய்வுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உலகத் தமிழர்களிடம் அடையாளம் பெற்ற எழுத்தாளரும், தற்போதைய மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன், பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT