Published : 21 Jun 2019 04:04 PM
Last Updated : 21 Jun 2019 04:04 PM
மதுரை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் 20 வார்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 'ஹாட் ஸ்பாட்' குழுவினர் களம் இறங்கி முன்னெச்சரிக்கை சுகாதாரப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2017-18ம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 20 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 18 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகினர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர்.
பொதுவாக டெங்கு காய்ச்சல் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தொடங்கும்போதுதான் அதிகளவு பரவும். மழைநீர் வடிந்து செல்லாமல் தேங்கி நின்றால் அதில் டெங்கு, சிக்கன் குன்யா கொசுக்கள் பரவும்.
தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பலி ஏற்பட்ட வார்டுகளை அடையாளம் கண்டு, அந்த வார்டுகளில் மாநகராட்சி 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுரையில் டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா, யானைக்கால் நோய்கள் அதிகளவு பரவுகிறது.
யானைக்கால் நோய், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் அசுத்த தண்ணீரில் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் பரவுவதால் மழைநீர் தேங்கி நிற்கும்போது, இந்த காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கிறது. கோடை காலத்திலும் தற்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
கோடையில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் நல்ல தண்ணீரை டிரம்புகள், குடங்கள், பாத்திரங்களில் பாதுகாப்பு இல்லாமல் திறந்து வைக்கும்போது டெங்கு கொசுக்கள் அதில் உற்பத்தியாகிறது. அதனால், முன்பு மழை சீசனுக்கு மட்டுமே வந்த டெங்கு காய்ச்சல் தற்போது ஆண்டு முழுவதும் வரத்தொடங்கியுள்ளது.
மதுரையில், மண்டலம்-1ல் வார்டுகள் 8(விளாங்குடி), 14(மேல பொன்னகரம்), 18(எஸ்எஸ்காலனி), 20(அரசரடி), 23(விசாலாட்சி நகர்), மண்டலம் 2-ல் 59(மீனாட்சி நகர்), 66(சோத்கிருஷ்ணன் கோவில்), 71(பாலரெங்காபுரம்), 25(கன்னனேந்தல்), 28(உத்தங்குடி), 36(ஆழ்வார்புரம்), 44(கே.கே.நகர்), 47(ரிசர்வ் லைன்), மண்டலம்-4ல், 79(பெருமாள் தெப்பக்குளம்), 81(தமிழ்சங்கம்), 92(கோவலன்நகர்), 94(பாம்பன் சாமி நகர்), 95(மன்னர் கல்லூரி), 97(ஹார்விபட்டி), 98(திருநகர்) ஆகிய 20 வார்டுகள் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவக்கூடிய வார்டுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்த வார்டுகளில்தான் 20 பேர் வரை டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். அதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புள்ள இந்த வார்டு பகுதிகளை "ஹாட் ஸ்பாட்' என பட்டியலிட்டுள்ளோம்" என்றார்.
இவ்வார்டுகள் மீது, சுகாதாரப்பிரிவினர் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இந்த வார்டுகளில் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க இன்று முதல் அபேட் மருந்து, புகை மருந்து அடித்தல் பணிகளையும், காலி மனைகளில் உள்ள கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துதல் பணியையும் மேற்கொள்ள உள்ளோம்.
மேலும், பூச்சியியல் வல்லுநர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள உள்ளோம். காய்ச்சல் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் நடத்த உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT