Published : 22 Jun 2019 02:53 PM
Last Updated : 22 Jun 2019 02:53 PM
கம்பத்தில் தொழிலாளர் சங்கங்கள் திராட்சைத் தோட்டத்தில் பெண்கள் வேலை செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கூலியையும் அடிக்கடி உயர்த்தி வருகின்றன. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று திராட்சை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முல்லைப் பெரியாறு நீரோட்டம், மலைசூழ் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் விவசாயம் வளமாக உள்ளது. குறிப்பாக திராட்சை பயிர் இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பன்னீர் திராட்சை ஆண்டுக்கு ஒருமுறை விளைச்சல் தந்து கொண்டிருக்க இங்கு மட்டும் 3 முறை மகசூல் கிடைக்கிறது. காரணம் இப்பகுதியின் குளிர் பருவநிலைதான். இதற்காக கோவை, மதுரை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கேரளா வியாபாரிகள் காமயகவுண்டன்பட்டியில் முகாமிட்டு இவற்றைக் கொள்முதல் செய்து வெளி இடங்களுக்குச் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரூ பகுதியில் இருந்து வரும் விதையில்லா பச்சை திராட்சை ஜனவரி, பிப்ரவரி உள்ளிட்ட ஆண்டின் சில மாதங்கள் மட்டும் வரும். அப்போதெல்லாம் பன்னீர் திராட்சைக்கு உரிய விலை கிடைக்காது. கடந்த சில மாதங்களாகவே ரூ.30 முதல் ரூ.70 வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்த இதன் விலை தற்போது ரூ.120-ஐ எட்டியுள்ளது. இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், விளைச்சல் வெகுவாய் குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் திடீர் திடீரென கூலியை உயர்த்தி வருவதாலும் மகசூல் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் உருவாகி வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கம்பம் திராட்சை விவசாயிகள் நலச்சங்க தலைவர் எம்.சிவக்குமார் கூறுகையில், "அடுத்த தலைமுறை தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாகவில்லை. இதனால் பழைய ஆட்கள் மூலமே வேலை நடைபெறுகிறது. இந்நிலையில் ரூ.350 பெற்று வந்த கூலியை ரூ.500, ரூ.550 என்று உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.
திராட்சை தோட்டங்களைப் பொறுத்த அளவில் அன்றாடப் பணிகளை தள்ளி வைக்கக்கூடாது. இதனால் சில விவசாயிகள் கேட்ட கூலியைக் கொடுத்து விடுகின்றனர். இதைச் சுட்டிக்காட்டி மற்ற இடங்களிலும் கூலி கேட்கின்றனர். தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்களிடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
திடீரென்று பெண்களை கூலி வேலைக்கு அமர்த்தக் கூடாது. வெளியூர் ஆட்களை வைத்து வேலை பார்க்கக் கூடாது என்கின்றனர். பத்து பேர் பார்க்கக்கூடிய வேலையை இரண்டுபேர் முடித்துத் தருவதாகக் கூறி அதிக கூலி கேட்கின்றனர். இதனால் விவசாயப் பணி வெகுவாய் பாதித்து பலருக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே தென்னை, வாழை போன்று மாற்றுப்பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். கூலியாட்கள் பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
ஆண்டு முழுவதும் விளைந்தாலும் விலை கிடைப்பது குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளையும், விவசாயிகளையும் ஒருங்கிணைத்து ஆண்டு முழுவதும் சீரான விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல விலை கிடைத்தாலும் தற்போது விளைச்சல் 60 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT