Published : 08 Jun 2019 06:19 PM
Last Updated : 08 Jun 2019 06:19 PM
ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு வழங்கிய மாத்திரைக்குள் இரும்புக்கம்பி இருந்ததால் நோயாளி மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஏராந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது குடும்பம் மீன்பிடித் தொழில் செய்து வருகிறது. இவரது மனைவி சக்தி (45). இவருக்கு நேற்று முன்தினம் காலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனையடுத்து சக்தி ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றார்.
மருத்துவர் பரிசோதனைக்கு பின் சக்திக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பின்னர் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு சக்தி வீட்டுக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொண்டை புண்ணாக இருந்ததால் மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட 'சிப்ரோ ப்லாக்ஸசின்' மாத்திரைக்குள் சிறிய அளவிலான இரும்புக்கம்பி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த மாத்திரையை சாப்பிடாமல் வைத்துவிட்டார். இதை அக்கம் பக்கத்தினரிடம் காட்டியதும், அதை பார்த்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நோயாளி சக்தியிடம் கேட்டபோது, "அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை அங்கிருந்த செவிலியர் வழங்கினார். அதை வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிட முயன்றபோது, மாத்திரைக்குள் இரும்புக் கம்பி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதை உடைக்காமல் சாப்பிட்டிருந்தால் என் உடல்நிலை மோசமாகி இருக்கும். குழந்தைகளுக்கு இதுபோன்ற மாத்திரைகளை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே மருந்து நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமர குருபரன் கூறியதாவது, "மாத்திரையில் கம்பி இருந்த தகவல் கிடைத்ததும், தாய் சேய் நல அலுவலர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர் அறிக்கை சமர்பித்ததும், இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குர் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கும் அறிக்கை சமர்பித்து நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT