Last Updated : 21 Jun, 2019 05:14 PM

 

Published : 21 Jun 2019 05:14 PM
Last Updated : 21 Jun 2019 05:14 PM

போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கத்தைத் தொடர்ந்து லத்தியால் தாக்கி இறந்த இளைஞரின் உடலை குடும்பத்தினர் பெற்றனர்

மதுரையில் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கத்தை தொடர்ந்து லத்தியால் தாக்கி இறந்த இளைஞரின் உடலை குடும்பத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றுக் கொண்டனர்.

மதுரையில் கடந்த 15-ம் தேதி இரவு போலீஸார் வாகனச் சோதனையின்போது தாக்கியதில் எஸ். ஆலங்குளத்தில் டயர் கடை நடத்திவந்த விவேகானந்த குமார் (38) மரணம் அடைந்தார். ஆனால், அவர் தானாகவே விழுந்ததில் காயம் அடைந்து உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த விவேகானந்த குமாரின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், விவேகானந்த குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவி கஜபிரியாவுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்த சிசிடிவி பதிவுகளை வழங்க வேண்டும் எனப் பல்வேரு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 5 நாளுக்கு மேலாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி  அவரது உடலையும் வாங்கவும் மறுத்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பணியில் இருந்து டெல்டா படை போலீஸாரிடம் உதவி காவல் ஆணையர் ஒருவர் விசாரணை நடத்தினார்.

அவரது விசாரணையின் அடிப்படையில், சம்பவ நாளன்று பணியில் இருந்த மதுரை திலகர் திடல் காவல் நிலைய காவலர் ரமேஷ்பாபு என்பவரை நேற்று (வியாழக்கிழமை) பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் (பொறுப்பு) சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க காவல்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்குவது, கஜபிரியாவுக்கு அரசு வேலை, கூடுதல் இழப்பீடு குறித்து அரசுக்கு பரிந்துரைப்பது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன்பின், உடலை வாங்குவதற்கு குடும்பத்தினர், உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் அவரது மனைவி கஜபிரியா மற்றும் குடும்பத்தினரிடம் உடலை போலீஸார் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை நகலும் அவரது  குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர். கடந்த 6 நாட்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை முடிவு வந்துள்ளது. விவேகானந்த குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x