Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

அதிகபட்சமாக ராமாவரத்தில் 1.75 லட்சம் வாகனங்கள்; சென்னையில் 13 போக்குவரத்து சந்திப்புகளில் கடும் நெரிசல்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஆய்வில் தகவல்

சென்னையில் லட்சக்கணக்கான வாகனங்களால் திணறும் 13 போக்குவரத்து சந்திப்புகள் மெட்ரோ ரயில்திட்டம் 2-ம் கட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக ராமாவரம் சிக்னலில் தினமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 8 முதல் 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் எண்ணிக்கை 1.28 சதவீதமாக அதிகரிக்கிறது. தமிழக அரசு பதிவேட்டின்படி, கடந்த ஆண்டு வரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், சென்னையில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 53.94 லட்சமாக உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் மெட்ரோ ரயில் திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது.

அதன்படி, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் - திருமயிலை - சோழிங்கநல்லூர்- சிறுசேரி, மாதவரம் - போரூர் - மேடவாக்கம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் 118 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான தேவை, சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

86 இடங்களில் ஆய்வு

மேற்கண்ட 3 வழித்தடங்களுக்கு உட்பட்ட சென்னையின் முக்கியமான சாலைகள், போக்குவரத்து சந்திப்புகள் என மொத்தம் 86 இடங்களில் தினமும் கடந்து செல்லும் மொத்த வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக ராமாவரம் சிக்னலில் அதிகபட்சமாக 1,75,412 வாகனங்களும், அடுத்தபடியாக கோயம்பேடு சந்திப்பில் 1,72,999 வாகனங்களும், பள்ளிக்கரணை நாராயணபுரம் சிக்னலில் 1,56,412 வாகனங்களும் தினமும் கடந்து செல்வது தெரியவந்துள்ளது.

இதேபோல், டைடல் பார்க் (1.37 லட்சம்), சேத்துப்பட்டு (கேஆர்எம் டவர்) சந்திப்பு (1.31 லட்சம்), நந்தம்பாக்கம் வர்த்தக மையம் சந்திப்பு (1.31 லட்சம்), வள்ளுவர்கோட்டம் (1.29 லட்சம்), போரூர் விரிவாக்கம் (1.27 லட்சம்), நந்தனம் விரிவாக்கம் (1.25 லட்சம்), ரெட்டேரி சந்திப்பு (1.15 லட்சம்) உட்பட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தலா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இதில், 20 முதல் 40 சதவீதம் வரையில் கார், ஜீப், வேன் போன்றவகை வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மொத்த வாகனங் களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

தரமான புள்ளி விவரங்கள்

இதுதொடர்பாக மெட்ரோ ரயில்அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய மெட்ரோ ரயில் கொள்கையின் அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தவுள்ள வழித்தடங்கள், மக்கள் தொகை, வாகனங்கள் எண்ணிக்கை போன்றஅடிப்படையான புள்ளி விவரங்கள் தரமாக இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்துக்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியும். அதன் அடிப்படையில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்துமுழுமையாக ஆய்வு மேற்கொண்டபோது, லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் 13-க்கும்மேற்பட்ட சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில் தற்போது, சோழிங்கநல்லூர் - மாதவரம் - கோயம்பேடு தடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.

மக்களின் வரவேற்பு

இதுதொடர்பாக போக்குவரத்து துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்து, ரயில்போக்குவரத்து வசதி இல்லாததுதான் தனியார் வாகனங்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

வளர்ந்த நாடுகளில் பொது போக்குவரத்து வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேலும், தனியார் வாகனங்கள் வாங்கினால் புதிய வரிகளும் விதிக்கப்படுகின்றன. எனவே, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் அவசியமானது. பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும்.

கட்டணம் அதிகம்

ஓரளவுக்கு நியாயமான கட்டணத்தில் மக்கள் பயணம் செய்யும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். தற்போது, கட்டணம் அதிகமாக இருப்பதாக சிலர் கருதுகின்றனர். இதுவே, சென்னையில் 70 அல்லது 80 கிமீ தூரத்துக்கு சீரான மெட்ரோ ரயில்சேவை கிடைக்கும்போது மக்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x