Published : 20 Jun 2019 01:59 PM
Last Updated : 20 Jun 2019 01:59 PM
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் வளரிளம் பருவத்தினருக்கான பாலியல் விழிப்புணர்வு கல்வி மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் உள்ளிட்டவை பற்றிய போதனைகளை வழங்க பிரத்யேக வகுப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 12 மாநகராட்சிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வகுப்புகளை எடுக்க மாநகராட்சி முனைப்பு காட்டிவருகிறது.
இதனை செயல்படுத்த எஃப்.பி.ஏ.ஐ ( ஃபேமிலி பிளானிங் அசோஷியேசன் ஆஃப் இந்தியா) மற்றும் எச்.சி.எல். நிறுவனங்களுடன் மதுரை மாநகராட்சி கைகோர்த்துள்ளது.
பாலியல் கல்வி மற்றும் மாதவிடாய் சம்பந்தமான சுகாதாரம் பற்றி முழுவீச்சில் ஆசிரியர்கள் பாடம் நடத்த இயலாத சூழலில் உயிரியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இவற்றை விளக்கிவருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு தெளிவான அறிவுரைகளை போதிக்க மாநகராட்சி இத்தகைய அமைப்புகளுடன் இணைந்துள்ளது.
இது குறித்து தி இந்து தமிழ் திசைக்காக பேசிய எஃப்.பி.ஏ.ஐ ( ஃபேமிலி பிளானிங் அசோஷியேசன் ஆஃப் இந்தியா) மதுரை கிளை மேலாளர் பிரதீபன் கூறும்போது, "இத்தகைய திட்டம் கடந்த 1979-ம் ஆண்டு முதலே அமலில் இருக்கிறது. ஆனால், சமீபகாலமாகத்தான் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டம் கடந்த 2017-ல் தொடங்கப்பட்டது. அப்போது 2 பள்ளிகளைத் தேர்வு செய்து பயிற்சி அளித்தோம். அடுத்து 2018-ல் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த ஆண்டு மீதமுள்ள 12 மாநகராட்சிப் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். பாலின பேதம், பாலின வன்முறை, குழந்தைகளின் உரிமை மற்றும் கடமைகள், பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் ஆகியன குறித்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
6- வகுப்பு 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய ஆலோசனைகள் வேறு மாதிரி இருக்கிறது. 10 முதல் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான ஆலோசனைகள் வேறு மாதிரி இருக்கும். எங்கள் குழுவில் எஃப்.பி.ஏ.ஐ அதிகாரிகள், எச்.சி.எல். ஃபவுண்டேஷனின் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் இடம் பெற்றிருக்கின்றனர். முதலில் மாணவர்களின் நம்பிக்கையைப் பெறும் வேலையையே எங்கள் குழுவினர் செய்வார்கள்.
பின்னர் படிப்படியாக அவர்களிடம் பாலினம், பாலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்துவார்கள். மாதவிடாய் சுகாதாரம் எவ்வளவு முக்கியமானது. மாதவிடாய் நாட்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துகள் எவை? எதற்காக மாதவிடாய் நாட்களுக்குப் பயந்து விடுமுறை எடுப்பது அவசியமில்லை என உடல் மற்றும் உளவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
அதேபோல் மாணவர்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஏன் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை சொல்கிறோம். இதனால், பாலின பேதம் தவிர்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தாய், தங்கைகளின் உணர்வுகளை, உடல் உபாதைகளைப் புரிந்து கொள்கிறார்கள்.
சில குழந்தைகள் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக பேச தயக்கம் காட்டுவார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குகிறோம்.
பாலின ஈர்ப்பை காதல் எனக் குழப்பிக் கொள்வது ஏன் கூடாது? அதனால் எதிர்காலம் எப்படி தடைபடும் என்பதை விளக்கிக் கூறுகிறோம்.
பொதுவாக இந்த வயதில் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்கள் அறைகுறை புரிதலோடு தகவலைப் பகிரும்போது அது சில நேரங்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இவற்றையெல்லாம் தடுக்கவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக மதுரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறோம்.
அடுத்த ஆண்டு முதல் ரெஃப்ரெஷிங் கோர்ஸ் என்ற அடிப்படையில் புதிதாக 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இத்தகைய வகுப்புகளை நடத்துவோம். மேல் வகுப்புக மாணவர்களுக்கு ஃபாலோ அப் வகுப்புகள் நடத்தப்படும்" என்று கூறினார்"
ஒவ்வொரு முறை பாலியல் குற்றங்கள் நடக்கும்போதும் மட்டுமே பாலியல் கல்வியை பள்ளியிலேயே அறிமுகப்படுத்துவது பற்றி பேசப்படுகிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் ஒவோர் ஆண்டும் மாணவர்களுக்கு இத்தகைய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT