Published : 08 Jun 2019 06:52 PM
Last Updated : 08 Jun 2019 06:52 PM

நீட் தேர்வு தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிட்டதா?- தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றும் படிப்புகள்: சைதை துரைசாமி சிறப்புப் பேட்டி

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை, பள்ளிப் படிப்பு தோல்வியால் தற்கொலை என தேர்வு முடிவுகள் தோல்வியோடு வாழ்க்கை முடிகிறது என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். அதையும் தாண்டி சாதிக்க நிறைய படிப்புகள் உள்ளன என்கிறார் மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி.

சமீபத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை முடிவைத் தேடிக்கொண்டனர். பள்ளித் தேர்வில் முதலிடம் பிடித்த நாம் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோமே என்கிற அவமானத்தில் அந்த முடிவை எடுத்துள்ளனர்.

அதையே மாற்றி யோசித்திருந்தால் பள்ளித் தேர்வில் வெற்றி பெற்ற நாம் நீட் தேர்வில் எங்கே தவறவிட்டோம் என அடுத்து முயற்சியைத் தொடங்கியிருந்தால் அவர்கள் வெற்றியாளர்களாக வலம் வந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இளம் பருவத்தினருக்கு அப்படிப்பட்ட மனோதிடத்தைச் சுற்றியுள்ளவர்கள் அளிக்க தவறுவதே இத்தகைய முடிவுக்குக் காரணம் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றியாளர்கள் அனைவரையும் கேட்டுப்பார்த்தால் அவர்கள் பலதடவை தோற்ற பின்னரே அந்த நிலைக்கு வந்துள்ளனர் என்பதைத் தெரிவிப்பார்கள்.

தோல்வி நிலையானது அல்ல என்பது வாழ்க்கை தத்துவம். அதேபோன்று ஒரு குறிக்கோளை அடைய முடியாவிட்டால் மாற்று வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் வெல்லவேண்டும். அப்படி வென்றவர்கள் வரலாறு எண்ணிலடங்கா.

இதே கருத்தை முன் வைக்கிறார் மனித நேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தேர்வு முடிவு மட்டும்தான் வாழ்க்கையா? தேர்வு தோல்விகளை அடுத்து தற்கொலைகள் அதிகரிக்கிறதே?

தமிழ்நாடு முழுவதும் எத்தனைப்பேருக்கு மருத்துவர் படிக்க வாய்ப்பு. நீட் இருக்கிறது, இல்லை என்கிற குழப்பங்கள் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒன்றைப் பெறுவதற்காக ஒரு முயற்சி எடுக்கிறோம். மருத்துவம் படிக்க வேண்டும் என பெருமுயற்சி எடுக்கிறோம். அதற்காகப் படித்து நீட் தேர்வை எழுதுபவர்கள் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தால் மீண்டும் முயன்று அடுத்த முயற்சியில் வெல்ல வேண்டும்.

முதல் முயற்சியில் சிலபேர் தோல்வி அடைகிறார்கள். இரண்டாம் முயற்சியில் வென்று முதலிடத்தையே பிடிக்கிறார்கள். ஏனென்றால் முதல்முயற்சியில் அனுபவம் கிடைக்கிறது அல்லாவா? அதை வைத்து இரண்டாம் வாய்ப்பில் வெல்கிறார்கள். ஆகவே முயற்சி எடுப்பதுதான் முக்கியம், வாழ்க்கையை முடித்துக்கொள்வதல்ல.

இரண்டாம் முயற்சியிலும் தோல்வி கிடைக்கிறது. அடுத்து நான் என்ன செய்வது என குழப்பம் வருமல்லவா?

இரண்டாம் முயற்சியிலும் தோல்வி அடைந்தாலும் பாதகமில்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இருந்தீர்கள். வாய்ப்பு அமையவில்லை. அதற்காகச் சோர்ந்து போகக்கூடாது.

மருத்துவக் கனவு தகர்ந்தது? சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்னால் வேறு என்ன படிப்பு படிக்க முடியும்?

சாதிக்க வேண்டும், அதை எந்தத் துறையிலும் சாதிக்கலாம். அதற்கான மாற்றுப்படிப்புகள், மருத்துவப் படிப்பைவிட உயர்வான மக்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியதிகாரப் படிப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

விரிவாக விளக்க முடியுமா?

மருத்துவத் துறையில் வேலை வாய்ப்பு இல்லை, அதை நோக்கிப் போக முடியவில்லை என்றால், சோர்வு வேண்டாம். யூபிஎஸ்சி, குரூப்-1 போன்ற படிப்புகள் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், சாதாரண ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டால், நீங்கள் அத்தகைய உயர் பதவி பெறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை சொல்கிறேன்.

நீட் தேர்வுக்கு இரண்டுமுறைதான் முயற்சிக்க முடியும், சாதாரணமாக 21 வயதிலிருந்து 32 வயதுவரை பொதுப்பிரிவினரும், 35 வயது வரை பிற்படுத்தப்பட்டவர்களும், 37 வயதுவரை தாழ்த்தப்பட்ட பிரிவினரும் பலமுறை ஆட்சிப்பணி தேர்வை எழுதலாம்.

மாற்று எண்ணமும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

ஆமாம், 17 வயதில் பள்ளிப்படிப்பு, 20 வயதில் பட்டப்படிப்பு முடித்து 21 வயதில் ஐஏஎஸ் எழுத தயாராக முடியும். 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பிலிருந்து மாணவர்களைப் பெற்றோரும் ஆசிரியரும் தயார்படுத்தவேண்டும். மருத்துவம் என தயார்படுத்தும்போதே மாற்றாக இதுபோன்ற ஆட்சிப்பணி தேர்வும் உள்ளது என பெற்றோரும் ஆசிரியரும் தயார்படுத்த வேண்டும்.

இன்னொரு தகவலையும் சொல்கிறேன். ஐஏஎஸ் தேர்வில் மருத்துவப் படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட சதவீதம் உள்ளனர். அப்படி என்றால் என்ன அர்த்தம். நீட் தேர்வைவிட உயர்ந்தது இத்தகைய படிப்புகள்.

இந்தியாவிலேயே உயர்ந்த படிப்பு யூபிஎஸ்சி தேர்வு. பிரதமர் பதவிக்கு இணையானது கேபினட் செகரெட்டரி பதவி. அதை அடைய ஆட்சிப்பணி படிப்பையும் படிக்கலாம். ஆகவே அடைந்தால் மருத்துவப் படிப்பு அதன் பின்னரும் ஆட்சிப்பணிக்கு படிக்க வேண்டும் என சொல்லி வளர்க்கலாம்.

இப்படி மாற்றுப் படிப்பைச் சொல்லி வளர்க்கும்போது, தோல்வி வந்தாலும் வேறு ஒரு முயற்சி எடுக்க நினைப்பார்கள். இந்த விழிப்புணர்வுதான் நம் கல்வி முறையில் சொல்ல வேண்டும்.

ஆட்சிப் பணி மட்டுமல்ல நீட் போன்ற மற்ற தேர்வுகளிலும் வெல்ல என்ன செய்யவேண்டும்?

மாணவர்களை 6-ம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவன், மாணவி பொது அறிவிலும், நினைவாற்றல் திறனிலும், நேர மேலாண்மையைக் கையாளும் திறன், 24 மணி நேரத்தை கையாளும் திறனை ஒரு மாணவனுக்கு பெற்றோரும் ஆசிரியரும் சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்களை நீட் தேர்வு மட்டுமல்ல ஆட்சிப்பணி தேர்விலும் அனாவசியமாக வெல்வார்கள்.

ஒரு மாணவரை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அவர்களது ஞாபகத்திறன், கற்றல் திறனை  ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து கண்டறிய வேண்டும். அதற்கு மாணவர், மாணவி தகுதி இல்லாவிட்டால் அவர்கள்மீது திணிக்கக்கூடாது. இந்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இல்லாததே பல தோல்விகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

பெற்றோர், ஆசிரியர் எந்த வகையில் இருக்க வேண்டும்?

மாணவப்பருவத்திலிருந்து நீ  என்னவாகவேண்டும், விளையாட்டு வீரனாக விரும்புகிறீர்களா? இலக்கியவாதியாக வர விரும்புகிறீர்களோ அதை நோக்கி அந்த பன்முகத்தன்மையை நோக்கிய பயணம் படிப்படியாக 12-ம் வகுப்பு வரை வர வேண்டும். முதலில் மாணவரின் எண்ணம் என்ன என்பதற்கேற்ப பெற்றோர் முடிவு செய்யவேண்டும்.

பள்ளித் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோரும் இப்படி மாணவர் விருப்பத்தை நிறைவேற்ற 12-ம் வகுப்பு வரை தொடர் கண்காணிப்புடன் தயார் செய்ய முயற்சி எடுத்தால் அந்த மாணவர் விரும்பிய துறையை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. 

இதற்கு அக்கறையும், 24 மணி நேரத்தை எவ்வாறு கையாளுவது, இலக்கை அடைய எதை நோக்கி பயணப்படுவது என்கிற பயிற்சியும் அளிக்கப்படவேண்டும்.

இதுதவிர தேர்ச்சி முறைக்குத் தயாராவதில் உள்ள இடையூறு என்ன என்று நினைக்கிறீர்கள்?

கற்றல் திறன் குறைய மாணவர்கள் உடல் நிலையும் ஒரு காரணம். கிராமப்புற மாணவர்கள் இதனால்தான் பாதிக்கப்படுகிறார்கள். படிக்கலாம் என்று நினைப்பான். ஆனால் தூக்கம் தூக்கமாக வரும், சோர்வு வரும். இதற்கு காரணம் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கலாம். ஆண்களுக்கு 15 எண்ணிக்கையும், பெண்களுக்கு 13 எண்ணிக்கையும் கட்டாயம் இருக்கவேண்டும். அதற்கான ஊட்டச்சத்தை கட்டாயம் அளிக்கவேண்டும்.

கிராமப்புற மாணவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுக்கு எங்கே போவார்கள்?

இதற்காக எங்கும் போகவேண்டாம். சாதாரண முருங்கக்கீரை, பேரீச்சம் பழம் இரண்டிலும் அதற்கான சத்துகள் உள்ளன. இவை இரண்டு மட்டும் போதும். கீரையும் சாப்பிட்டு, சூப்பையும் சாப்பிட்டால், பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் போதும் ஹீமோகுளோபின் அளவு அப்படி உயரும். மன திடமும் உயரும்.

நீட் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு முன்னரே, ஹீமோ குளோபின் அளவைக் கண்டறிந்து அதற்கான ஊட்டச்சத்து உணவைக் கொடுத்து அவர்களைத் தயார்படுத்துவதும் ஒருவித பயிற்சி. ஊட்ட உணவும் மிக முக்கியம்.

நான் மருத்துவம் படிக்கவேண்டும் என்கிற முனைப்புடன் படித்துவிட்டேன். எல்லோரும் எதிர்பார்ப்புடன் உள்ளபோது தோல்வி அடைகிறேன் அதை நான் எப்படி எதிர்கொள்வது?

அதுதான் இந்த சமூகக் கட்டமைப்பில் உள்ள தாழ்வு மனப்பான்மை என்பேன். நான் டாக்டருக்குத்தான் படிப்பேன் என்கிற முனைப்பு இருந்தால் முதல் வருடம் தோல்வி என்றால் முயற்சி எடுத்து அடுத்த வருடம் எழுதி வெற்றி பெறவேண்டும். அப்படியும் தோல்வியா? தூக்கிப்போட்டுவிட்டு வேறு துறையை முயற்சிக்க வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான். அதை வாழ்ந்துத்தான் பார்க்க வேண்டும்.

இதற்கு தீர்வு என்ன?

முக்கியமான தீர்வு கவுன்சிலிங்தான். 11-ம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கொடுக்கப்படும் கவுன்சிலிங்தான் நான் மேற்சொன்ன விஷயங்கள். தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டுவரவேண்டும்.

மாற்றுப்படிப்பாக ஆட்சிப்பணி படிப்புக்கு வரும் மாணவர்களுக்கு உதவுவீர்களா?

ஆண்டுக்கு 8,000 மாணவர்களுக்கு ஆட்சிப்,பணியிலும், 6,000 பேருக்கு குரூப் 1 பயிற்சியிலும், 6,000 பேருக்கு குரூப் 2 பயிற்சியிலும் மற்ற அரசுப் பணிகளுக்காக 2000 மாணவர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி கொடுக்கிறோம். ஆகவே தாரளமாகத் தகுதியுள்ளவர்கள் வரலாம்.

இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x