Published : 10 Jun 2019 04:31 PM
Last Updated : 10 Jun 2019 04:31 PM
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளுக்கு அவரது தந்தை 'கண்ணீர் அஞ்சலி' பேனர் வைத்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவரது மகள் அர்ச்சனா (21). இவர் அதேபகுதியைச் சேர்ந்த மணி (எ) சுப்பிரமணி (25) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
சுப்பிரமணி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அர்ச்சனா காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காதல் திருமணம் நிரந்தர வாழ்க்கையைக் கொடுக்காது, மகிழ்ச்சியாகவும் இருக்காது. எனவே, பெற்றோர் பார்த்து முடிவு செய்து கொடுக்கும் வாழ்க்கை நிம்மதியைக் கொடுக்கும் என சரவணன் தன் மகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆனால், அர்ச்சனா தன் காதலனைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா- சுப்பிரமணி ஆம்பூரில் உள்ள ஒரு கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இத்தகவல் சரவணனுக்குத் தெரிந்ததும் அவர் ஆத்திரமடைந்தார். உடனே, மகள் இறந்து விட்டதாகக் கூறி கதறி அழுதார். இந்நிலையில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட அர்ச்சனா கணவருடன் வாழ்க்கை தொடங்கியுள்ள நிலையில், அவர் இறந்து விட்டதாகக் கூறி அர்ச்சனாவுக்கு ஆம்பூர் சுற்றுவட்டாரம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தார்.
இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, உறவினர்கள் சரவணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் மகளுக்கு இறுதிச் சடங்கு நடத்த உள்ளேன் என்று சரவணன் கூறிய தகவல் மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனரை அவரது தந்தையே ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT