Published : 04 Jun 2019 09:44 AM
Last Updated : 04 Jun 2019 09:44 AM

கொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்!- தமிழ் இலக்கிய அடையாளமான நாஞ்சில் நாடன்!

தமிழகத்தின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர் நாஞ்சில் நாடன். மிக எளிய மனிதராகத் தோற்றமளிக்கும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தால், நேரம் போவதே தெரியாது. இலக்கியமா, அரசியலா, வாழ்வியலா... எதைப் பற்றிப் பேசினாலும், மிகத் தேர்ந்த மனிதரிடம் பேசுகிறோம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

பிறந்தது நாகர்கோவில் வீரநாராயணமங்கலம் கிராமம்.

புலம்பெயர்ந்தது மும்பை. அங்கிருந்து வந்து 30 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார். கோவைப்புதூரில் உள்ள அவரது வீட்டில் நாஞ்சில் நாடனை சந்தித்தோம்.

"ஐந்தாம் வகுப்பு வரை எங்க கிராமத்துப் பள்ளி.  8-வது வரை எறச்சகுளம் நடுநிலைப் பள்ளி.  எஸ்.எஸ்.எல்.சி. தாழக்குடி உயர்நிலைப் பள்ளி. அப்பா கணபதியாப் பிள்ளை. என் பெயர் சுப்பிரமணியப் பிள்ளை. பின்னாலதான் பெயரை மாற்றி, கெஜட்ல வெளியிட்டேன். கன்னியாகுமரியில் பி.எஸ்சி. கணிதமும்,  திருவனந்தபுரத்துல எம்.எஸ்சி. கணிதமும் முடிச்சு, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வெல்லாம் எழுதினேன்.  பலனில்லை.

எனக்குச் தெரிஞ்சவர் மும்பையில கப்பல்படையில வேலை செஞ்சார். அவர் கூப்பிட்டவுடன் கிளம்பி, மும்பை கலெக்டர் அலுவலகத்துல தினக் கூலிக்கு வேலை செஞ்சேன். அப்புறம் தனியார் நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்ப தினக் கூலி ரூ.7. அந்த சமயத்துல பழைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். சாப்பாட்டு நேரத்துல ஆங்கிலப் புத்தகம் படிக்கறதை அதிகாரி பார்த்து, என்ன படிச்சிருக்கேனு கேட்டார். சொன்னேன். அப்புறம் எதுக்கு இந்த வேலைக்கு வந்தேனு கேட்டதுக்கு, வேற வேலை கிடைக்கலைனு சொன்னேன். உடனே ரூ.210 சம்பளத்தில் கிளார்க்கா பணிநியமனம் செஞ்சாரு. தொடர்ந்து, பல்வேறு நிலைகளுக்கு உயர்ந்தேன்.

நான் பிறந்தது 1947 டிசம்பர் 31. என்னோட 12 வயசுலேயே வாசிப்பு ஆரம்பமாயிருச்சு. காமிக்ஸ், துப்பறியும், மாயாஜாலக் கதைகளில் தொடங்கி, கல்கி, ஜெகசிற்பியன், நா.பா., ஜெயகாந்தன் புத்தகங்களை எல்லாமே படிக்க ஆரம்பிச்சேன்.  1965-ல் ஒரு கவிதை எழுதி குமுதத்துக்கு அனுப்பினேன். அது பிரசுரமாகலை. மும்பையில் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு ஞாயிறுதோறும் இலக்கியக்  கூட்டங்கள் நடக்கும். அதேபோல,  ‘ஏடு’னு 32 பக்க புத்தகம் வெளியிட்டாங்க. கவிஞர் கலைக்கூத்தன் அதை கவனித்து வந்தார். அந்த இதழை, சென்னை தீபம் அலுவலகத்துல அச்சடிச்சாங்க. சங்க நிகழ்வுகள் பற்றி அரைப் பக்கம் எழுதிக் கொடுப்பேன். ஏடு இதழுடன், தீபம் இதழும் சென்னையிலிருந்து வரும். அதை வாசிக்கும்போது நாமும் ஏன் கதை எழுதக்கூடாதுனு தோணும். ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். 1975-ல் என் முதல் கதை பிரசுரமானது. இந்த கதையைப் பாராட்டி வண்ணதாசன் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் காலத்துல இலக்கிய சிந்தனை அமைப்பை ப.சிதம்பரமும், ப.லட்சுமணனும் நேரடியா நிர்வகிச்சு வந்தாங்க. ப.லட்சுமணன்  பஞ்சாலைக்கு பஞ்சு வாங்க மும்பை வருவார்.

அப்படி வந்தப்ப என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, வரவழைத்துப் பேசினார்.  'இந்த மாசம் இலக்கிய சிந்தனை சார்பில், சிறந்த சிறுகதைக்கான பரிசு உனக்கு'னு சொல்லி, ரூ.50 கொடுத்தார். ஆக, என் முதல் சிறுகதையே இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது. அதற்குப் பிறகும் 3 முறை அந்த பரிசை வாங்கியிருக்கிறேன்" என்றார்.

நாஞ்சில் நாடனின் முதல் நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’. இதை வெளியிட அவர் பட்ட சிரமத்தை விவரித்தபோது, அதுவே ஒரு நாவல்போல இருந்தது. அதற்குப் பிறகு, ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ என்ற முதல் சிறுகதை தொகுதி வெளிவந்திருக்கிறது. அதுவே, தங்கர்பச்சானின் சினிமாவாகவும் வந்தது.

1989-ல் மும்பையிலிருந்து கோவைக்கு அவர் பணி  மாறுதலில் வந்தபோது,  2 சிறுகதை  தொகுப்புகள், 4 நாவல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. கோவைக்கு வந்த பிறகு  நூல்களின் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்திருக்கிறது.

`சூடிய பூ சூடற்க' சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றதும், 2009-ல் கலைமாமணி வாங்கியதும், 2012-ல் இயல் விருது கிடைத்ததும் கோவை மண்ணில்தான் என்று நெகிழ்ச்சியுடன்  விவரித்தார் நாஞ்சில் நாடன். "நான் நாகர்கோவிலில் 26 வருடம், மும்பையில் 30 வருடம் வாழ்ந்திருக்கிறேன். கோவைக்கு வரும்போது புவியரசு, சிற்பியைத்  தவிர வேறு யாரையும் தெரியாது. இங்கே வந்த பின்புதான் விஜயா பதிப்பகம் வேலாயுதம், ஞானி, அமரநாதன், செந்தலை கெளதமன், ஆறுமுகம், வேனில் கிருஷ்ணமூர்த்தி எல்லாம் அறிமுகமானாங்க.

நான் வேலை செய்த அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே ஞானியின் வீடு. அதனால் அவரை அடிக்கடி சந்தித்து, இலக்கியப்  பரிவர்த்தனை செய்துகொள்ள முடிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் இலக்கியக் கூட்டங்கள், நிறைய வாசிப்புகள். அதெல்லாம்தான் என்னைப் புடம் போட்டிருக்கின்றன. என் மகன் டாக்டர், மகள் இன்ஜினீயர் என வாழ்க்கையில் செட்டிலாகவும் இந்த மண்ணே உதவியிருக்கிறது. இங்குவராமல் மும்பையிலேயே இருந்திருந்தால்,  என் இலக்கியப் பயணம் மிதவை நாவலுடனே அஸ்தமித்தும்கூட இருக்கலாம்.

புனைவுக் கதைகள் எழுத ஆரம்பித்தபோது, அவை கதை, நாவல் எழுதற மாதிரி அல்ல என்பதை உணர்ந்தேன். வந்த  சொல்லே திரும்பத் திரும்ப வருவதில் அர்த்தமில்லை, சுவாரசியமும் இல்லை என்றே தோன்றியது.  சொற்களைத் தேடி திருக்குறள், நாலடியார், திவ்யப்பிரபந்தம், சிலப்பதிகாரம், கம்பன், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என எந்த நூல்களைத் தேடினாலும் நிறைய சொற்கள் கிடைத்தன.

‘ஓணான்’ என்ற சொல்லை நாகர்கோவில்காரங்க ‘ஓந்தான்’னும், கோவைக்காரங்க ‘ஒடக்காயி’ன்னும் சொல்றாங்க. இதை இலக்கியத்தில் தேடும்போது, ஓந்து, ஓதி, ஒடக்கா, ஒடுக்கானு போயிக்கிட்டே இருக்கு. இதேபோல, உறக்கம், துயில், துஞ்சுதல் எல்லாம் ஒரே பொருள். ‘சோறு’ நம் அசல் தமிழ்ச் சொல். ஆனா, சாதம், ரைஸ், சாப்பாடு, சாவல்னு சொல்றோம். புருஷ்டம் என்றால் புட்டம். அதற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வார்த்தைகள் உண்டு.

இதையெல்லாம் பேராசிரியர்கள் வட்டார வழக்கு என கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார்கள். அந்த சொற்கள் எல்லாம், நம் மொழிக்கு பாமர மக்கள் எழுப்பிய கட்டுமானப் பொருட்கள். அதை நாம் தவறவிடக் கூடாது. மண், மணல், செங்கல் எல்லாம் சேர்ந்ததுதான் அழகான கட்டிடம். செங்கல் இல்லாமல் கட்டிடம் உருவாகுமா? அதுபோலத்தான் வட்டார வழக்குச் சொற்கள் இல்லாமல் மொழி அழகாக இருக்காது. எனவே, வட்டார வழக்குச் சொற்களைப் பாதுகாக்க வேண்டும்.  கொங்கு மொழி, நாஞ்சில் மொழி, மதுரை மொழி  எல்லாமே கட்டுமானக் களஞ்சியம்தானே?

ஒரு பழத்தை சாப்பிடும்போது, அதில் உள்ள கொட்டைகளை எண்ணுகிறேன். இந்த பழங்களின்  கொட்டைகள் அத்தனைக்கும், விதைத்து முளைக்கும் உரிமை இருக்கிறது. நாம் சாப்பிட்டுவிட்டு எறிந்த கொட்டைகளில் சில முளைத்தால்கூட, அவற்றில் எத்தனை மரங்களை வளர அனுமதிக்கிறோம். அப்படி  விட்டிருந்தால்,  இந்த உலகு காடு சூழ் உலகாக இருந்திருக்கும். மரம் வளர்வதற்கான  உரிமையை மறுத்தது யார், அபகரித்தது யார் என்ற கேள்வி எழும்பும்போது,  நான் படித்த கணிதம்,  இலக்கிய அறிவாக, சமூக அறிவாக வெளிப்படுகிறது" என்று  சுவாரஸ்யமாக கூறிய நாஞ்சில் நாடனின் புனைப் பெயர் பற்றி கேட்டபோது, அதையும் சுவாரஸ்யம் மாறாமலே விளக்கினார்.

"நான் எழுத வரும்போது க.நா.சுப்பிரமணியம், சுகி.சுப்பிரமணியம்னு நிறைய சுப்பிரமணியங்கள்.  க.சுப்பிரமணியம்னு வைத்தால் நன்றாக இருக்காது. அப்ப எங்க ஊர்ப் பெயரோட இருக்கிற நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் மீது ஓர் ஈர்ப்பு. இப்படி பெயருடன் ஊரை சேர்த்துக் கொண்டால் நல்லாயிருக்குமே? என தேடியதில், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை சில காரணத்தால் ஒரே ஒரு நூலை நாஞ்சில் நாடன் என்ற பெயரில் எழுதி வெளியிட்டுவிட்டு, பிறகு அப்பெயரையே பயன்படுத்தவில்லைனு தெரிஞ்சுது. அந்தப் பெயரை அப்படியே எடுத்து வச்சுக்கிட்டேன்" என்று கூறி விடைகொடுத்தார் நாஞ்சில்நாடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x