Published : 08 Jun 2019 11:17 AM
Last Updated : 08 Jun 2019 11:17 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சியால் செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர், மேய்ச்சலுக்கு புல் உள்ளிட்ட தாவரங்கள் இன்றி தவித்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்தாண்டும் வறட்சி தொடர்வதால், கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் நிலங்கள் வறண்டு கிடப்பதால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு புல், பூண்டு இல்லாமல் தவிக்கின்றன.
முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயி கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சியைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஆடு களுடன் குடிபெயர்ந்து விட்டனர். மீதி இருக்கும் 50 விவசாயிகளே இங்கு ஆடுகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு விவசாயியும் 100 முதல் 500 ஆடுகள் வரை வைத்துள்ளனர். இந்த ஆடுகள் கிராமத்தைச்சுற்றி 10 கி.மீ. தொலைவில் உள்ள கண்மாய்கள் மற்றும் காட்டுக் கருவேல மரம் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று, கருவேல மர நெற்றுகளையும், காய்ந்த புற்களையும் மேய விடுகின்றனர். பின்னர் குடிநீருக்காக கிராமத்தில் அய்யனார் கோயில் ஊருணி மற்றும் அருகேயுள்ள ஒரு ஊருணியில் மட்டும் கொஞ்சமாக தேங்கியுள்ள மழைநீரை பருக விடுகின்றனர்.
இதுகுறித்த தேரிருவேலியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது, கடந்த 5 ஆண்டு களாக எங்கள் கிராமத்தில் வறட்சி நிலவுகிறது. அதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. கடந்த பருவ மழையின்போது, சில நாட்கள் பெய்த மழையில் அய்யனார்கோயில் ஊருணியில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியது. இந்தத் தண்ணீரை நம்பித்தான் ஆயிரக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறோம்.
இந்த நீரும் வற்றி விட்டால், மேய்ச்சல் நிலம் மற்றும் தண்ணீர் உள்ள மாவட்டங்களுக்கு ஆடு களைக் கொண்டு செல்வோம். அதனால், எங்கள் கிராமத்தில் உள்ள ஊருணி, கண்மாய்களை தூர்வாரி மழைக்காலத்தில் கூடுதல் தண்ணீர் தேக்க வேண்டும். மேலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர்தேக்கத் தொட்டிகளை கட்டி கால்நடைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT