Published : 18 Jun 2019 11:30 AM
Last Updated : 18 Jun 2019 11:30 AM

பின்னலாடை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி: திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

மத்தியில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக அரசு பதவி ஏற்றுள்ளது. திருப்பூர் உள்ளிட்ட பின்னலாடை தொழில்துறையின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் ஏராளம். கடந்த ஆட்சியில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., இரவோடு இரவாக அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால், சில ஆண்டுகள் தொழில் வளர்ச்சி பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக, பின்னலாடைத் துறையின் சிறு, குறு தொழில்துறையினர் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

ஏற்றுமதியை வளமாக்கும் வகையில் ‘வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (Free Trade Agreement) அமல்படுத்தப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி உட்பட பல்வேறு தேவைகள் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து, ஒற்றைக் குடையின் கீழ் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஒன்று திரளத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை ஆலோசகர் ஆர்.எம். சுப்பிரமணியம் கூறியதாவது:

திருப்பூரின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், இயற்கையாக அமைந்த ‘டிவிசன் ஆஃப் லேபர்’ (Division Of Labour) என்ற தொழில்முறைதான். புரிதலுக்காக மிகைப்படுத்தி கூறினால், 10-க்கு 10-க்கு அறை, பொருளாதார வசதி இருந்தால், கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்ய முடியும் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட நகரம்தான் திருப்பூர்.

நூலை விலைக்கு வாங்கி, தேவைப்படும் வகையில் நிட்டிங், டையிங், பிளீச்சிங், பிரிண்டிங், கட்டிங், அயர்னிங், பேக்கிங் என ஆடை தயாரிப்புக்கான அனைத்து செயல்களையும் இங்குள்ள சிறு, குறு தொழிலகங்களில் செய்து ஏற்றுமதி செய்ய முடியும். தொழிலை குறிப்பிட்ட பகுதிக்குள் அனைவரும் பங்கிட்டு வேலை செய்வதுதான் திருப்பூரின் வெற்றிக்கு மூலதனம்.

பொருளாதார மண்டலம்?

திருப்பூர் செங்கப்பள்ளியில் ஜவுளி பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஜவுளி பொருளாதார மண்டலத்துக்குள் சென்று வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால், பலரும் அதனை புறக்கணித்தனர். போக்குவரத்து, ஆவணங்கள் அதிகம் தேவைப்படும் என்பதால், அது வெற்றி பெற இயலாமல் போனது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சலுகைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே அனைவரும் பயன்படுத்த இயலும். ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுவதால், அரசு திட்டத்தை மாற்ற இயலாது.

திருப்பூரில் தொழிலாளர் களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது வீட்டு வசதிகள் தான். வீடுகள் கட்டித் தந்தால், திருப்பூர் பல மடங்கு வளர்ச்சியை எட்ட இயலும். குடும்பமாக திருப்பூருக்கு வர நினைப்பவர்கள், குடியிருப்பு இல்லாமல் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் குடியிருப்பு கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழில்துறை யினருடன் இணைந்து மத்திய, மாநில அரசுகள் தான் இதனை செய்துதர வேண்டும். தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நல்லதொரு சம்பளத்தை வழங்குகிறார்கள். தொழிலாளர் தேவை என்பது எப்போதும் திருப்பூருக்கு உண்டு. அவர்களுக்கு குடியிருப்பு இருந்தால், ஒரே இடத்தில் வேலை செய்வார்கள். இதன்மூலமாக நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

thiruppurjpgஏ.சி. ஈஸ்வரன் - ஆர்.எம். சுப்பிரமணியம்

சைமா அமைப்பின் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறும்போது, ‘திருப்பூர் பனியன் தொழிலில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில் உள்நாட்டிலும், ஏற்றுமதியிலும் சிரமத்தை சந்தித்து வருகிறது. திருப்பூரில் ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்களை வைத்து வேலை செய்ய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை.

தொழிலாளர்கள் தங்கு வதற்கும், வெளியே சென்று வரவும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. இதனால், வெளியூர் தொழிலாளர்கள் நிலையாக பணியில் தொடர்வதில்லை. திருப்பூரை சுற்றியுள்ள ஏராளமான விவசாயக் குடும்பங்களில் இருப்பவர்கள்கூட, பனியன் நிறுவனத்தில் கட்டிங் செய்த பனியன் ஜட்டிகளை எடுத்துக்கொண்டு போய் தைத்து, அதில் கிடைக்கும் கூலியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

இதில் ஈடுபடுபவர்கள் அதிகம் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களாகவும் உள்ளனர். அவர்களும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் என்ற அரசின் உத்தரவு, அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. குடிசைத் தொழில்போல் அருகில் இருப்பவர்களுக்கும், கிராமத்தி லுள்ள தாய்மார்களுக்கும் வீட்டு வேலைபோக எஞ்சிய நேரங்களில் தொழிலைக் கற்றுகொடுத்து, குடும்ப செலவினங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

வறட்சியான கிராமங்களில் வாழும் மக்களுக்கு, பனியன் தொழில் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

எனவே, கிராமப்புற மக்களுக்கு உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில், இது, கிராம விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் பெரிய உதவியாக இருக்கிறது' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x