Published : 06 Jun 2019 02:03 PM
Last Updated : 06 Jun 2019 02:03 PM
மதுரை மீனாட்சியம்மன் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆம்புலன்ஸ் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
மதுரை மீனாட்சி யம்மன் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், கலைநயமிக்க கட்டிடக்கலைகளையும், கோயில் உட் பிரகாரங்களையும், கோபுரங்களையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் சுற்றிப்பார்த்துச் செல்வர். இதற்கு குறைந்தது 2 மணி நேரமாகிவிடுகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் முதி யோர், நோயாளிகளுக்கு திடீர் உடல் நலகுறைவு, மயக்கம் ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வாய்ப்பில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரை உரிய நேரத்தல் மருத்துவமனைக்கு ஆம்புலன் ஸ்சில் அழைத்து சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் ஆதங்கப் பட்டனர். ஆனால், அவர் மாரடைப்பு ஏற்பட்டவுடனே இறந்துவிட்டதாக கோயில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், அவசர காலங்களில் மருத்துவ உதவி பெற வசதியாக தற்போது கோயில் நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளது. தனியார் நிறுவன நன்கொடை பங்களிப்புடன் இந்த ஆம்புலன்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பக்தர்களுடைய அவசர மருத்துவ வசதிக்காக பெரியார் பஸ்நிலையம், கிழக்கு நுழைவு வாயில் உட்பட 3 இடங்களில் ஏற்கெனவே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும், கோயிலுக்கென பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லை என்ற புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்போது ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது" என்றார்
மருத்துவமனை அமைக்கப்படுமா?
காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள், அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்களுக்கு அவசர மருத்துவ உதவி கிடைக்க கோயில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து முதுநிலை மருத்துவ அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மருத்துவமனை சார்பில் கோயில் வளாகத்தில் நிரந்தர மருத்துவ முகாம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதை கோயில் நிர்வாகம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், கோயிலில் நிரந்தர மருத்துவ முகாம் அல்லது மருத்து வமனை அமைப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம்தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT