Last Updated : 24 Jun, 2019 12:00 AM

 

Published : 24 Jun 2019 12:00 AM
Last Updated : 24 Jun 2019 12:00 AM

தண்ணீர் தட்டுப்பாட்டால் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அதிகரிப்பு

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி யில் பிளாஸ்டிக் குடங் கள் விற்பனை அதிகரித் துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை நீர் ஆதாரமாக கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவில் குடிநீர் பிரச்சினை இல்லை. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

4-வது பைப்லைன் திட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. கோடை காலத்தில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் 4-வது பைப்லைன் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. மாநகராட்சியின் சில வார்டுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சில வார்டுகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் வறண்டன. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு 4-வது பைப்லைன் திட்டத்தின் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது.

எனவே, கடந்த 2 மாதங்களாக 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீரை பிடித்து சேமித்து வைக்க வேண்டிய நிலை உள்ளது.

விற்பனை அதிகரிப்புதண்ணீரை வீடுகளில் சேமித்து வைக்க பிளாஸ்டிக் குடங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை கடந்த 2 மாதங்களாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடை நடத்தி வரும் என்.ஜெயசங்கர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவிய போது குடம் விற்பனை உச்சத்தில் இருந்தது. 4-வது பைப்லைன் திட்டம் தொடங்கிய பிறகு குடங்கள் விற்பனை குறைந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் குடங்களின் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது எங்கள் கடையில் தினமும் 30 முதல் 50 குடங்கள் வரை விற்பனையாகின்றன. இந்த குடங்கள் திருநெல்வேலியில் உள்ள கம்பெனியில் இருந்து வருகின்றன. 10 நாட்களுக்கு ஒரு முறை 500 முதல் 600 குடங்களை கொண்ட ஒரு லோடு வரும்.

10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய குடங்கள் தரத்துக்கு ஏற்ப ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகின்றன. அதுபோல பெரிய குடம் ரூ. 45 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x