Published : 11 Mar 2018 10:59 AM
Last Updated : 11 Mar 2018 10:59 AM
இந்தியக் குழந்தைகளின் ஊட்டச்சத்து, வளர்ச்சிக் குறைபாட்டுப் பிரச்சினைகளுக்கு காரணம் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது பரவலான கூற்று. இதை முற்றிலும் மறுக்க இயலாதுதான். அதேநேரம், சரிவிகித உணவு கிடைக்காதது மட்டுமே பிரச்சினை இல்லை. அதைவிட முக்கியப் பிரச்சினை இந்தியக் குழந்தைகளின் சுகாதாரமின்மை என்கின்றன பல்வேறு ஆய்வுகள். மேலும், சரிவிகித உணவு கிடைக்கும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கணிசமான அளவு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டு கின்றன.
உலக அளவில் உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் இருந்தே, உணவுக் குறைபாட்டைவிட சுகாதாரமின்மையே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணியாக இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இதற்கு முக்கியக் காரணம், சுற்றுப்புறங்களில் திறந்த வெளி யில் மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, வாந்தி எடுப்பது போன்ற சுகாதாரக் கேடான தன்மை நிலவுவது. இந்த இடங்களில் விளையாடும் குழந்தைகள் கை, கால்களை சரிவர கழுவாமல் உணவு உட்கொள்வது, நகங்களில் சேரும் அழுக்கை சுத்தம் செய்யாதது ஆகிய பழக்க வழக்கங்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.
கைமீறும் பிரச்சினைகள்
சரி, இதுபோன்ற சுகாதாரமின்மைப் பிரச்சினைகளால் நம் குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்?
இதற்கு பதில் அளிக்கிறார் பல்வேறு மருத்துவ நூல்களின் ஆசிரியரும், பிரபல மருத்துவரு மான கு.கணேசன்.
சுத்தமின்மை குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கை நகங்களில் அழுக்கு சேர்வது முக்கியக் காரணம். பொதுவாக, குழந்தைகள் வாயில் விரல்களை வைக்கும் பழக்கம் கொண்டவர்கள். இதுபோன்ற சூழலில், தரமான சோப்புகள் அல்லது தூய்மைப்படுத்தும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது 6 முறையாவது கை, கால்களை கழுவும் பழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.
கைகளைக் கழுவாமல் வாயில் விரல்களை வைத்தால், உணவு உட்கொள்ளும்போது அழுக்கு கள் வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கு அவை ‘சால்மோனல்லா’ கிருமிகளாகப் பெருகுகின்றன. இதனால் அஜீரணக் கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை வரை ஏற்படும். தோல் அழற்சி நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதுவே மழைக் காலத்தில் கை, கால்களை சரியாக கழுவாவிட்டால் எலிக் காய்ச்சல் (Leptospirosis) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எலிகளின் சிறுநீரில் காய்ச்சலுக்கான கிருமி இருக்கும். தெருக்களில் தேங்கும் மழைநீரில் எலிகளின் சிறுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். அந்த நீரில் நாம் கால் வைத்தால், பாத பித்த வெடிப்பு, நகங்கள் வழியாக கிருமிகள் சருமத்துக்குள் செல்லும். இதுபோன்ற சமயங்களில் ‘பின்வாம்’ எனப்படும் நூல் புழுக்கள் உருவாகும். அவை பாதத்தில் இருந்து முழங்கால், வயிறு, நெஞ்சு, கை என உடலின் பல்வேறு பாகங்களில் மேல்நோக்கி பயணித்து மூளை யில் சென்று தங்கிவிடும். அங்கேயே இனப்பெருக்கம் செய்து புழுக்கள் உருவாகவும் வாய்ப்பு உண்டு. இதனால் மூளைக் காய்ச்சல், வலிப்பு ஏற்படும்.
ரத்தம் குடிக்கும் புழுக்கள்
ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும், கை, கால் கழுவாததால் நம் உடலில் ஏற்படும் புழுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம் உடலில் புழுக்கள் வளர்ந்தாலே, நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வீண்தான். இதில் கொக்கி புழு மிகவும் மோசமானது. இது ரத்தம் குடிக்கும் வகையைச் சேர்ந்தது. ஒரு கொக்கிப் புழு ஒரு நாளுக்கு 0.2 மி.லி. ரத்தம் குடிக்கும். குறைந்தபட்சம் 100 கொக்கிப் புழுக்கள் இருந்தால்கூட, தினமும் 20 மி.லி. ரத்தத்தை குடித்துவிடும்.
நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சாதாரணமாக 14.5 கிராம் சதவீதம் இருக்க வேண்டும். இது நூறு சதவீதம் என்று பொருள். ஒருவரின் உடலில் குறைந்தது 12 கொக்கிப் புழுக்கள் இருந்தாலே ஒரு சதவீதம் ஹீமோகுளோபின் குறைந்துவிடும்.
இன்னொரு வகையான நாடாப் புழுக்கள், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் புரதச் சத்தை உறிஞ்சிவிடுகிறது. இதன்மூலம் ரத்தசோகை, புரதச் சத்துக் குறைபாடு, சவலைக் குழந்தை கள் உருவாவது, உயரம் மற்றும் எடை குறைவு பிரச்சினை ஆகியவை ஏற்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம், முறையாக கை, கால்களை கழுவாததே என்கிறார் மருத்துவர் கு.கணேசன்.
(இந்தக் கட்டுரை ‘ஸ்வச் பாரத்’ குறித்து HUL நிறுவனத்துடன் ‘தி இந்து’ இணைந்து வெளியிடும் ஸ்பான்சர்டு தொடரின் ஒரு பகுதி.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT