Published : 09 Mar 2018 08:21 PM
Last Updated : 09 Mar 2018 08:21 PM
வர்த்தகத்தை மட்டுமே மையமாக வைத்து சமூக நோக்கமில்லாமல் எடுக்கப்படும் திரைப்படங்களால் யாருக்கும் பயனில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று மும்பை திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 7-வது சர்வதேச ஆவண, குறும்படத் திருவிழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இத்திருவிழாவை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து கோபி நயினாருடன் நடந்த உரையாடல்:
வர்த்தக திரைப்படங்கள்தான் அதிகளவில் வெளியாகிறது. அது தவறா?
வணிகத்தில் இருந்து விலகி நிற்கும் வடிவமாக திரைப்படம் இருக்க முடியாது. சமூக நோக்கத்துடன் எடுக்கப்படும் வர்த்தக திரைப்படங்களை எடுப்பதில் தவறு இல்லை. வர்த்தகத்தை மட்டுமே மையமாக வைத்து சமூக நோக்கமில்லாமல் எடுக்கப்படும் திரைப்படங்களால் யாருக்கும் பயனில்லை.
திரைத்துறையில் கதைகளுக்கு காப்பி ரைட் அவசியம் அதிகரித்துள்ளதா?
படைப்புகளுக்கு காப்பி ரைட் என்ற விஷயத்தை தாண்டி சக படைப்பாளிகளுக்கும், சமூகத்துக்கும் பொறுப்புண்டு. மற்றொரின் படைப்பை, அறிவைத் திருடுவது அறிவுசார் திருட்டு. அவர்களாக திருந்த வேண்டும்.
திரைத்துறையிலிருந்து நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோர் அரசியலுக்கு வருகிறார்களே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதே நேரத்தில் லெனின், பெரியார் தொடர்பான நிகழ்வுகளின் உங்கள் கருத்தென்ன?
காவிரி பிரச்சினை, நீட் தேர்வு, தலித் பிரச்சினை உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. இதையெல்லாம் பேசும் அரசியல்வாதிகளை ஆதரிக்கிறேன். பெரியார், அம்பேத்கர், லெனின் போன்ற தலைவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவில் யாரும் அரசியல் செய்ய முடியாது.
அரசியலில் வெற்றிடம் உள்ளதாக கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
உண்மையில் மக்களிடத்தில்தான் வெற்றிடமுள்ளது.
அறத்தால் இடம் பிடித்துள்ளீர்கள். அடுத்து எவ்வகை திரைப்படத்தை படமாக்க உள்ளீர்கள்?
விளிம்பு நிலை மக்களின் நிலையை மையமாக வைத்து எனது அடுத்த திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். சமூக மாற்றம் தரும் திரைப்படங்களுக்கு பார்வையாளர்கள் ஆதரவு தர வேண்டும். அதுபோன்ற திரைப்படங்களை எடுப்பதையே இலக்காக வைத்து செயல்படுகிறேன்.
முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து விட்டீர்களா?
முக்கியமானவர்கள் நடிக்கிறார்கள்.
‘அறம் 2’ எடுக்கும் திட்டமுள்ளதா?
கண்டிப்பாக உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT