Published : 12 Mar 2018 03:33 PM
Last Updated : 12 Mar 2018 03:33 PM
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளையும், எழுப்பியுள்ளது. இந்த விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்ட உள்ளூர் மலைவாழ் மக்களின் பங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
தேனி மாவட்டம் போடி அருகே, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள உயர்ந்த மலைப்பகுதி குரங்கணி. வன விலங்குகள், அரிய வகை மூலிகை மரங்கள் என பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது குரங்கணி மலைப்பகுதி.
இந்த குரங்கணி மலைப்பகுதியில் எப்போதும் ஒரே மாதிரியான வானிலை நிலவும் என கூற முடியாது. சில சமயத்தில் குளிர்ந்த வானிலையும், சில சமயங்களில் வெப்பம் அதிகமாகவும் நிலவும்.
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலம் உள்ள நிலையில், குரங்கணி மலைப்பகுதியில் இப்போதே வறட்சி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இம்மாதிரியான வேளையில்தான், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 36 பேர் மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் குரங்கணிக்கு சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டில் தீ ஏற்பட்டதை முதலில் அங்கிருந்த மலைப்பகுதி மக்கள், தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களே பார்த்தனர். டாப் ஸ்டேஷன், கொளுக்குமலை ஆகிய மலைலைவாழ் மக்கள், காட்டுத்தீயைப் பார்த்து, மலையைவிட்டு கீழே இறங்கிவந்து மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
சுமார் 10 கிலோமீட்டர் தூரம்கொண்ட குரங்கணி மலைப்பகுதி மிகவும் செங்குத்தானதாகும். இந்த மலைப்பகுதியை முழுவதும் ஏறுவதற்கு சுமார் 3 மணிநேரமாகும். இருப்பினும், அப்பகுதி மலைவாழ் மக்கள் குறிப்பிட்ட தூரம் வரை சென்று காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் குரங்கணி மலைப்பகுதிக்கு விரைவதற்கு முன்பே, மலைவாழ் மக்கள், அங்கிருந்த இளைஞர்களே தங்களால் இயன்றளவு மலையேறி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிலரை மீட்டனர். மேலும், அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியுடன் முதலுதவியும் அளித்தனர். அதன்பின்பு இரண்டு மணிநேரம் கழித்துதான், தீயணைப்பு துறை, வனத்துறையினர் இந்த விபத்தின் தீவிரத்தை புரிந்துக்கொண்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலைவாழ் மக்கள் துணிந்து, காலம் தாழ்த்தாமல் மீட்பு பணிகளை துவங்கியதால்தான் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்றுகூட சொல்லலாம்.
இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய மலைப்பகுதியில் ட்ரெக்கிங் போன்ற சாகச பயணங்களுக்கு வனத்துறையின் அனுமதி கட்டாயம். அவ்வாறு அனுமதியுடன் மலையேற்றம் செல்பவர்களுடன் வனத்துறை அதிகாரி பாதுகாப்புக்காக செல்ல வேண்டும்.
அதுமட்டுமின்றி, மலைப்பகுதியில் எவ்வாறு பாதுகாப்பாக ட்ரெக்கிங் செல்வது, எந்தெந்த இடங்கள் ஆபத்து நிறைந்தவை, எந்த நேரத்தில் ட்ரெக்கிங் செல்ல வேண்டும், எத்தனை பேர் செல்லலாம் என்ற நுட்பங்கள், வனத்துறையினரைவிட, அங்கு காலம்காலமாக வாழ்ந்துவரும் மலைவாழ் மக்களுக்கே அதிகம் தெரியும். அதனால், பொதுமக்கள் மலையேற்றம் செல்லும்போது, உள்ளூர் மலைவாழ் மக்களை சேர்ந்தவர்களை வனத்துறை அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான், காட்டுத்தீ மட்டுமல்லாமல் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது ஏற்படும் நிலச்சரிவு ஆகியவற்றிலிருந்து சுற்றுலா பயணிகளை ஓரளவுக்கு பாதுகாக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT