Published : 05 Mar 2018 10:12 AM
Last Updated : 05 Mar 2018 10:12 AM
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க இரவு நேரப்பணிக்கு ரூ.7 ஆயிரம் ஊதியத்தில் ‘அவுட்சோர்ஸிங்’ அடிப்படையில் செவிலியரை நியமிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனைச் சார்ந்த 18-க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் உள்ளன. இந்த மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்களில் பொது வார்டுகளில் 8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியரும் பணிபுரிய வேண்டும். ஆனால், 15 முதல் 20 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர்தான் உள்ளனர்.
இதுமட்டுமின்றி வார்டுகளில் மருத்துவப் பணிகளில் செவிலியருக்கு உதவியாக கடந்த காலத்தில் செவிலியர் உதவியாளர், மருத்துவமனை பணியாளர் போன்றவர்கள் ஒரு வார்டுக்கு 4 பேர் பணிபுரிந்தனர். தற்போது இவர்களும் இல்லை. இவர்களுக்குப் பதிலாக பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை நியமித்துள்ளனர். இவர்களும் 3 வார்டுக்கு ஒருவர் மட்டுமே பணியில் உள்ளனர். அதனால், வார்டுகளில் அனைத்து பணிகளையும் செவிலியர்களே பார்க்கும் நிலை உள்ளது.
நோயாளி பராமரிப்பில் சிக்கல்
மகப்பேறு மற்றும் பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செவிலியர் பற்றாக்குறையால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதனைச் சார்ந்த மருத்துவ நிலையங்களில் இரவு நேரங்களில் நோயாளிகள் பராமரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவ நிலையங்களில் பற்றாக்குறையைச் சமாளிக்க ‘அவுட்சோர்ஸிங்’ முறையில் இரவுப் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமிக்கப்பட உள்ளனர்.
இரவு நேர பணிக்கு மட்டும்
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவ நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்களில் இரவு நேரப் பணிக்கு செவிலியர் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக மகப்பேறு, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. அதனால், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிலையங்களில் அவுட்சோர்ஸிங் முறையில் (தற்காலிக ஆதார முறை) மாதம் ரூ.7 ஆயிரம் ஊதிய விகிதத்தில் இரவு நேர பணிக்கு மட்டும் தேவைக்கு ஏற்ற அளவுக்கு பணியமர்த்தி செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ நிலைய தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், தற்காலிக ‘அவுட்சோர்ஸிங்’ முறையில் பணியமர்த்தப்பட்ட இந்த செவிலியருக்கான மாதாந்திர ஊதியத்தை ஒவ்வொரு மருத்துவமனையில் உள்ள முதல்வர்கள் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் சீமாங் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலைப் பயன்படுத்தி அந்த நிதியில் இருந்து பெற்று வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் பாதிக்கப்படும்
இதுகுறித்து செவிலியர்கள் கூறும்போது, ‘ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவதால் வந்தால் ஊதியம், வராவிட்டால் ஊதியம் இல்லை என்ற அடிப்படையில் சரியாக பணிக்கு வரமாட்டார்கள். பாதிக்கப்படுவது நோயாளிகள்தான். மேலும், நிரந்தரப் பணியில் இருக்கும் செவிலியரைப்போல் அவர்களுக்கு பொறுப்புகள் இருக்காது. அதனால், மருத்துவப் பணிகளில் தரம் இருக்காது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT