Last Updated : 14 Mar, 2018 08:41 AM

 

Published : 14 Mar 2018 08:41 AM
Last Updated : 14 Mar 2018 08:41 AM

தமிழகத்தில் புதிதாக 5 குவாரிகள் விரைவில் திறப்பு: ஆற்று மணல் விலை உயர்கிறது- செலவு அதிகரித்துள்ளதால் அரசு முடிவு

தமிழகத்தில் ஆற்று மணல் விலை உயர்கிறது. ஆற்றில் மணல் எடுத்து, கிடங்கில் இருப்பு வைத்து விற்பதற்கான செலவு அதிகரிப்பால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தையில் மணல் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. ஆற்று மணல் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து புதிய குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட ஏராளமான நடைமுறைகள் இருப்பதால் புதிய குவாரி திறக்க மூன்று மாதங்கள் வரை ஆகின்றன.

அதேநேரத்தில் எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, வெளிநாடுகளில் இருந்து மாதத்துக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் வீதம் 6 மாதங்களுக்கு வெளிநாட்டு ஆற்று மணல் இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரியுள்ளது. அடுத்த மாதம் 12-ம் தேதி இந்த டெண்டர் திறக்கப்படவுள்ளது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் 3, திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 2, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் மொத்தம் 12 குவாரிகள் இயங்குகின்றன. இதனிடையே, புதிய குவாரிகளைத் திறக்கும் நடைமுறையை அரசு விரைவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக 5 குவாரிகள்

கடலூர் மாவட்டத்தில், அழகியநத்தம், வாங்காக்கம், திருக்கண்டேஸ்வரம், திருவள்ளூர் மாவட்டத்தில் லட்சுமிவிலாசபுரம், ஊத்துக்கோட்டை ஆகிய 5 இடங்களில் புதிய மணல் குவாரிகள் திறப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களில் இக்குவாரிகளில் மணல் எடுக்கப்படும். இந்த குவாரிகளில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 யூனிட் (ஒரு யூனிட் 100 கனஅடி) மணல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லாரி லோடு என்பது 2 யூனிட் மணல். அதன்படி பார்த்தால் 55 ஆயிரத்து 750 லாரி லோடு மணல் கிடைக்கும்.

ஆற்றில் இருந்து மணல் எடுப்பது, மணலை ஏற்றி, இறக்குவது, மணல் சேமிப்பு கிடங்கு கொண்டு செல்லும் செலவு, புதிய குவாரிகளுக்கு மணல் சேமிப்பு கிடங்கு அமைப்பது, அவற்றுக்கு வேலி அமைத்தல், குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், அணுகு சாலைகள் அமைத்தல், வழக்கமான பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளதால் மணல் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இயங்கும் குவாரிகள், புதிய மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணலுக்கு வெவ்வேறு விலை இல்லாமல், சராசரியைக் கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. எப்படியாயினும், ஆற்று மணல் விலை சற்று உயரும். மணல் விலையை உயர்த்துவது அரசின் கொள்கை முடிவு என்பதால், விலையை எவ்வளவு உயர்த்துவது? அதை எப்போதிருந்து அமல்படுத்துவது என்பது பற்றி அரசுதான் முடிவு செய்து அறிவிக்கும் என்றார் அவர்.

அரசு நிர்ணயித்துள்ளபடி தற்போது ஒரு யூனிட் மணல் விலை ரூ.400. ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி. இந்த விலை சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய அரசு விலைப்படி ஒரு லாரி லோடு மணல் விலை ஜிஎஸ்டி சேர்த்து ரூ.840தான். ஆனால், சந்தையில் ஒரு லாரி லோடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், அரசு நிர்ணய விலை அதிகரிக்கப்பட்டால், சந்தை விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x