Published : 06 Mar 2018 09:29 AM
Last Updated : 06 Mar 2018 09:29 AM
யானைகவுனி ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு திட்டத்துக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன. இதனால், வடசென்னை மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் பின்புறம் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில் யானைகவுனி மேம்பாலம் உள்ளது. இப்பாலம் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 150 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் 100 மீட்டர் தூரம் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டிலும், 50 மீட்டர் தூரம் தமிழக அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகளும் உள்ளன. மேலும், நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோரமாக ஏராள மான சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் மிகவும் பழமையானது என்பதால், கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள் ளது.
இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் இரும்புத் தூண்கள் நிறுத்தப்பட்டு, பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், இந்தப் பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, ரயில்வே துறை மற்றும் தமிழக அரசும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தப் பாலம் மூடப்பட்டு, பேசின்பிரிட்ஜ் சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த மேம்பாலம் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு திட்டத்துக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன. இதனால் வடசென்னைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாகன ஓட்டி கள் சிலர் கூறுகையில், ‘‘வடசென்னைக்கு செல்லும் முக்கிய சாலையில் யானைகவுனி மேம்பாலம் இருப்பதால், எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும். பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணி மேற்கொள்வதாகக் கூறி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் மந்தமாகவே நடக்கின்றன. இத னால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்’’ என்றனர்.
இதுதொடர்பாக டிஆர்இயு துணைத் தலைவர் இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘யானைகவுனி மேம்பாலத் தில் 100 மீட்டர் தூரம் தெற்கு ரயில்வேயிடம் இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.26 கோடியே 44 லட்சம் தேவை. ஆனால், மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.1 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் மீதமுள்ள 50 மீட்டர் தூரம் மேம்பாலம் பணிகளை முடிக்க நிதி ஒதுக்கவில்லை. மேம்பாலப் பணியை மக்களின் அத்தியாவசியத் திட்டமாகக் கருதி, போதிய நிதி ஒதுக்கி, பணிகளை விரைவு படுத்த வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘யானைகவுனி ரயில்வே மேம்பாலம் அவசியம் என்பதால், ரயில்வே வாரியத்திடம் இத்திட்டத்தின் தேவையை எடுத்துக்கூறி கூடுதலாக நிதி பெற முயற்சித்து வருகிறோம். இதர நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தியும், இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT