Published : 01 Mar 2018 07:40 AM
Last Updated : 01 Mar 2018 07:40 AM
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மரணமடைந்த நிலையில் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் இருள் நீக்கியில் 1935-ம் ஆண்டு மகாதேவ அய்யர் சரஸ்வதி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இருள்நீக்கி யில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், ஆதிச்சபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியிலும் பயின்றார்.
தொடர்ந்து திருவானைக்காவலில் உள்ள வேதபாடசாலையில் படித்தார். பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தீட்சைபெற்று சந்யாசியாகி காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். காஞ்சி சங்கரமட மடாதிபதியான பின்னரும் தான் பிறந்த சொந்த கிராமத்து மக்கள் மீதும், கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் அக்கறை கொண்டவராக இருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற தகவலறிந்த இருள்நீக்கி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இருள்நீக்கியில் எந்த வேலைக்கும் செல்லாமல் துக்கம் அனுசரித்தனர். இருள்நீக்கியில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்துக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் நேற்று செல்லவில்லை. இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை. அதுபோல, இருள்நீக்கியில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திரர் பிறந்த வீட்டின் முன்பு அவரது உருவப் படத்துக்கு அவ்வூரைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியபோது, “எங்கள் கிராமத்தில் பிறந்து காஞ்சி சங்கர மடத்தின் பெருமைகளை உலகறியச் செய்தவர் ஸ்ரீ ஜெயேந்திரர். அவரது மறைவு எங்கள் கிராமத்துக்கு பெரிய இழப்பு. அவர் இருள்நீக்கி கிராமத்துக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பள்ளிக் கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தார். பெண்களுக்கு தையல் பயிற்சி, நூல் நூற்பு நிலையம் தொடங்கினார்.
இருள்நீக்கியில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். மருத்துவமனை ஒன்றை நிறுவி அதில் தற்போதும் டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இப்படி ஏராளமான உதவிகளை இப்பகுதி மக்களுக்கு செய்துள்ளார். அவரது மறைவு எங்கள் குடும்பத் தலைவரை இழந்ததைப் போல் உள்ளது. அவரது உடலை இருள்நீக்கி கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.
ஸ்ரீ ஜெயேந்திரர் ஜெயந்தி விழாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சீனிவாச ராமச்சந்திரன் கூறியபோது, “காஞ்சி சங்கர மடத்தில் இதுவரை பொறுப்பில் இருந்த மடாதிபதிகளிலேயே தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒரே மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் என்பது இவரது பெருமைகளில் ஒன்று. அவருக்கு கடந்த 30 ஆண்டுகளாக இருள்நீக்கியில் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு தையல் பயிற்சி, கயிறு திரிக்கும் பயிற்சி வழங்கி சுய உதவிக் குழுக்களாக செயல்படச் செய்தோம். இதற்கு உறுதுணையாக இருந்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கியவர் ஸ்ரீஜெயேந்திரர்.
தற்போது ஆதிச்சபுரம், கொரடாச்சேரி, நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகளை ஜெயேந்திரரின் அறிவுரையின்படி தொடங்கினோம். இப்பகுதியில் உள்ள பல கோயில்களுக்கு கும்பாபிஷேகத்துக்காக சங்கர மடத்தின் மூலம் நிதியுதவியை வழங்கியுள்ளார். இப்படி, திருவாரூர் மாவட்டத்துக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம். ஸ்ரீ ஜெயேந்திரரின் இழப்பு இப்பகுதி மக்களுக்கு பெரிய இழப்பாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT