Last Updated : 23 Mar, 2018 08:34 PM

 

Published : 23 Mar 2018 08:34 PM
Last Updated : 23 Mar 2018 08:34 PM

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவிகாரம்: மேல்முறையீடு செய்ய லட்சுமி நாராயணன் டெல்லி பயணம்

நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் மூவரை நியமித்தது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்வரின் நாடாளுமன்ற செயலரும், எம்எல்ஏவுமான லட்சுமி நாராயணன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். முரண்பாடுகளை மேல்முறையீட்டில் குறிப்பிடுவோம் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் மத்திய அரசு பாஜகவைச் சார்ந்த 3 பேரை தானாகவே நியமன எம்எல்ஏக்களாக நியமித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய லட்சுமிநாராயணன் எம்எல்ஏ டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

''நியமன எம்எல்ஏக்கள் விஷயத்தில் சட்டத்தில் இரண்டே வரிதான் உள்ளது. யூனியன் பிரதேச சட்டத்திலும், அரசியலமைப்புச் சட்டத்திலும் நியமன எம்எல்ஏக்களை எப்படி, யார் நியமிப்பது இந்த நடவடிக்கையை தொடங்குவது யார், நிறைவேற்றுவது யார் என்பது தெளிவாக இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க நாடாளுமன்றத்தில் யூனியன் பிரதேச சட்டத்தில் உரிய திருத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் அக்கருத்துக்கு முரண்பாடாக நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்தத் தீர்ப்பு முரண்பாடானது. பொதுவாக நீதிமன்றங்கள் இதுபோன்ற பரிந்துரைகளை செய்யும்போது தீர்ப்பை நிறுத்தி வைக்கும். ஆனால் இந்த வழக்கில் அவசர அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார்கள். எனவே முரண்பாடுகளை எடுத்துக்கூறி மேல்முறையீடு செய்ய உள்ளோம்'' என்று லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x