Last Updated : 06 Mar, 2018 08:05 PM

 

Published : 06 Mar 2018 08:05 PM
Last Updated : 06 Mar 2018 08:05 PM

ரஜினியும் கமலும் அரசியல் களத்தில் நீடிக்க மாட்டார்கள்: டிடிவி ஆதரவாளர் புகழேந்தி கருத்து

அரசியல் களத்தில் யார் முந்துவது என்று ரஜினிக்கும், கமலுக்கும் இடையே போட்டி உள்ளது. அவர்கள் அரசியல் களத்தில் நீடிக்க மாட்டார்கள். எனவே அவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பெங்களூர் செல்லும் வழியில் புதுச்சேரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக அமைச்சர்கள் பிரதமர் மோடியை திருப்திப்படுத்துவதற்காக தினந்தோறும் காலை ஒரு மணி நேரம் இந்தி மொழியைக் கற்று வருகின்றனர். பிரதமர் மோடிக்கு நாட்டில் எந்த வேலையும் கிடையாது. அதிமுகவில் பஞ்சாயத்து செய்வதையும், அதன் மூலம் அதிமுகவை அழிக்கும் வேலையையும் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு காவிரி நீருக்காக போராடக்கூடிய தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழகத்தில் எத்தனை அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டாலும் பிரதமர் மோடி காவிரிக்கு சாதகமாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் பிரதமர் சந்திக்க மாட்டார். எனவே முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது ஒரு நாடகம், அது எந்த விதத்திலும் தமிழக மக்களுக்கு பயன் தராது.

டிடிவி தினகரன் புதிய கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. புதிய கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுக் கட்சி தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. டிடிவி உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக புதிய கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கலாம்.

அரசியல் களத்தில் யார் முந்துவது என்று ரஜினிக்கும், கமலுக்கும் இடையே போட்டி உள்ளது. அவர்கள் அரசியல் களத்தில் நீடிக்க மாட்டார்கள். எனவே அவர்கள் ஒரு பொருட்டே அல்ல. தற்போது கூட 64 எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் வரத் தயாராக உள்ளனர்.''

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x