Published : 09 Mar 2018 08:53 AM
Last Updated : 09 Mar 2018 08:53 AM
திருச்சி அருகே நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் பலியான உஷா (34), கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவை திருமணம் செய்துகொண்டவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்களம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு- லட்சுமி தம்பதியின் மகன் தர்மராஜா என்கிற ராஜா (37). இவருக்கு இரண்டு சகோதரிகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராஜா தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உஷாவை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் ராஜா. ராஜாவின் வீடு, குடிசை வீடாக இருந்ததாலும், போதிய வசதி இல்லாமல் இருந்ததாலும் உஷா தன்னுடைய தாய் வீடு உள்ள திருச்சி துவாக்குடியில் தங்கியிருந்தார். அவ்வப்போது சூலமங்களத்துக்கு வந்து, கணவர் வீட்டில் ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் தாய் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக உஷா திருச்சியில் உள்ள மாற்றுதிறனாளிகள் சிறப்பு பள்ளி ஒன்றியில் வேலை பார்த்து வந்தார். இதனால் ராஜாவும் திருச்சியில் உள்ள தனது மனைவியைப் பார்த்து வர அவ்வப்போது செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற உஷாவின் தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உஷாவும், ராஜாவும் பரிசுப் பொருளாக டேபிள்டாப் வெட்கிரைண்டர் ஒன்றை வாங்கிக்கொண்டு தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது நடந்த துயரச் சம்பவத்தில்தான் உஷா உயிரிழந்தார். இதனால், சூலமங்களத்தில் உள்ள ராஜாவின் உறவினர்கள் நேற்று திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றதால் அந்தத் தெரு வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதுகுறித்து சூலமங்களத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் கூறியபோது, “ராஜாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். உஷா, தன் கணவரோடு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது பலியாகி உள்ளார். உஷாவின் இழப்பால் ராஜாவின் குடும்பம் நிலைகுலைந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT