Published : 13 Mar 2018 09:56 AM
Last Updated : 13 Mar 2018 09:56 AM
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் கோடை காலத்தில் பரவும் காட்டுத் தீக்கு வனவிலங்குகளும், மரம், செடி, கொடிகளும் இரையாகி வருகின்றன.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மழை வளமும், வன வளமும் காடுகளை நம்பியே இருக்கிறது. எனினும், ஆண்டுதோறும் இயற்கையாகவும், செயற்கையாகவும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து இந்த வளங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையாக மூங்கிலோடு மூங்கில் உரசி தீ உண்டாவது அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படும் தீயால்தான் அதிகளவு காடுகள் அழிகின்றன.
காடுகளில் ஆடு, மாடுகள் மேய்க்க செல்கிறவர்கள், வெயில் காலத்தில் புல்வெளிகளை அழித்தால் மழைக் காலத்தில் செழிப்பாக வரும் என நினைத்து தீ வைக்கிறார்கள். பட்டாக்காடுகளில் சரகுகளை தீ வைக்கும்போது அது காடுகளுக்குப் பரவுகிறது. இதுதவிர ‘ட்ரெக்கிங்’, சுழல் சுற்றுலா செல்வோர் சமையல் செய்வதால் தீ விபத்து பரவுகிறது. சிகரெட், பீடியை தூக்கிப்போடுவதால் காடுகளில் தீ பற்றுகிறது. சமீப காலமாக வனவிலங்குகளை வேட்டையாடுகிறவர்கள், திட்டமிட்டு காடுகளுக்கு தீ வைக்கின்றனர்.
இதில் அதிகம் காட்டுத்தீக்கு இரையாவது மேற்கு தொடர்ச்சி மலைதான். இந்த மலைத்தொடர்தான் தமிழகத்தின் மழைக்கும், செழுமைக்கும் அடிப்படை காரணமாக உள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மட்டுமல்லாது கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மற்ற சிறிய மலைத்தொடர்களிலும் அமைந்துள்ள வனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள்.
அதற்காக மாநில அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கும். இந்த நிதியை கொண்டு வனப்பகுதி அமைந்துள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள், காடுகளில் தீப்பற்றினால் அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க கோடை காலத்துக்கு முன்பாகவே தீத் தடுப்புக் கோடுகள் அமைப்பார்கள். காடுகளில் மரம், செடி,கொடிகள், அடர்ந்த புதர்கள் தொடர்ச்சியாக காணப்படும். ஒற்றையடி வழிப்பாதைகள்கூட அமைந்திருக்காது. இந்த இடங்களில் தீப்பற்றினால் அது ஒட்டுமொத்த காட்டையே அழித்துவிடும். வனவிலங்குகள் வாழ்விடங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால், கோடைக் காலங்களில் வனத்துறையினர், காடுகளுக்கு இடையே குறிப்பிட இடைவெளிக்கு ஒரு பகுதியில் மரம், செடி, கொடிகளை வெட்டி தீத் தடுப்புக் கோடுகள் அமைப்பார்கள்.
வேட்டையாடப்படும் வன விலங்குகள்
அதனால், ஒரு இடத்தில் பிடிக்கும் தீ மற்ற இடங்களுக்கு பரவாது. ஆனால், நடப்பாண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முழுமையாக தீத் தடுப்புக் கோடுகள் போடப்பட்டதா என்பது தெரியவில்லை. அதற்கான கண்காணிப்பும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிகள்கூட வறட்சிக்கு இலக்காகி உள்ளன. காட்டாறுகள் வறண்டு போய் உள்ளன. அதனால், கடந்த ஒரு வாரமாக இலேசாக பரவும் தீக்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மரம், செடி,கொடிகள் தீப்பிடித்து எரிந்து மிகப்பெரிய தீ விபத்தாக மாறிவிடுகின்றன. அதனால், வன விலங்குகள், காடுகளை விட்டு வெளியே ஊருக்குள் புகுந்து வருகின்றன.
தொடர் தீ விபத்துகள்
இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கோடைக் காலம் தொடங்கும் முன்பே, காடுகளில் பெரும் தீ விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக வனப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்பட்டன. அதுபோல,கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக ஆங்காங்கே வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்தன. கண்ணுக்கு தெரியாமல் ஏராளமான காட்டுயிர்களும் இறந்தன. அதுபோல், நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில், காட்டுத் தீயில் மாணவர்கள், குழந்தைகள் சிக்கி உயிரிழந்த போடி மலைப்பகுதியிலும், கடந்த ஒரு வாரமாக காட்டுத் தீ எரிந்து வந்துள்ளது. தீத் தடுப்புக் கோடுகள் போடப்படாததால், இந்த இடங்களில் ஏராளமான மரம், செடி, கொடிகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
இரவில் தீயை அணைப்பது சாத்தியமா?
இதுகுறித்து முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் வனதாசன் ஆர்.ராஜசேகரன் கூறியதாவது:
டிசம்பரிலே தீத் தடுப்புக் கோடுகள் போட வேண்டும். ஆனால், தீத் தடுப்புக் கோடுகள் தாமதமாக போடப்படுகிறது. இதற்கான நிதியும் சரியாக ஒதுக்கப்படுவதில்லை. வனத்துறையினருக்கு காலத்துக்கு ஏற்றார்போல் நவீன தீயணைப்புக் கருவிகள் இல்லை. இலை, தழைகளை வைத்து தீயை அணைக்கும் பரிதாப நிலைதான் உள்ளது. காடுகளுக்குள் பிடிக்கும் தீயை பகல் நேரத்திலேயே உடனடியாக அணைக்க முடியாது. தீயணைப்பு வீரர்களும், வனத்துறை ஊழியர்களும் எளிதாக தீ விபத்து ஏற்பட்ட வனப்பகுதிக்குள் செல்லவும் முடியாது.
பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாலை நேரங்களில்தான் அதிகமாக தீ விபத்து நடக்கிறது. இரவுக்குள் ஒட்டுமொத்து காடுகளும் எரிந்து நாசமாகிறது. இரவு நேரத்தில் காட்டுக்குள் சென்று தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதும், தீ பரவுவதை தடுப்பதும் வனத்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் பிடித்த இந்த தீயை தண்ணீரை கொண்டு அணைப்பதும் சாத்தியமில்லை.
அதனால், வனத்துறை ஊழியர்கள் தீப்பிடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரவாமல் தடுக்க, முன்கூட்டியே தீத் தடுப்புக் கோடுகள் போட்டு இருக்க வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் சரியான கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதனால், இந்த விஷயத்தில் வனத்துறை அதிகாரிகளையும், ஊழியர்களை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. காட்டுக்குள் ட்ரெடிக்கிங் சென்றால் மீண்டும் வந்த வழியே திரும்பி வருவதற்கு வனத்துறை ஊழியர்கள் வழிகாட்டுதல் அல்லது சம்பந்தப்பட்ட காடுகளை பற்றிய அனுபவம் பெற்ற சூழலியலாளர்கள் வழிகாட்டுதல் வேண்டும். ஆனால், காட்டுத்தீயை பார்த்ததுமே ட்ரெக்கிங் சென்ற பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அவர்களுக்கு இதுபோன்ற அடர்ந்த காடுகளுக்குள் சென்ற அனுபவம் இல்லை என்பதால் அவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் ஓடி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீத் தடுப்புக் கோடுகள்
காடுகளில் ஓரிடத்தில் பிடிக்கும் தீ மற்றப்பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்காக, காடுகளுக்கு இடையே மரங்கள் மற்றும் செடி, கொடிகளை 2 மீட்டர் முதல் 5 மீட்டர் அகலத்துக்கு வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்துவதே தீத் தடுப்புக் கோடுகள் ஆகும்.
மரம், செடி, கொடிகள் வெட்டப்படும் 2 மீட்டர் அகலத்துக்கு நடுவில் ஒன்றுமே இருக்காது. அதனால், ஒரு இடத்தில் பிடிக்கும் தீயானது, இந்த இடைவெளியைத் தாண்டி (தீத் தடுப்புக் கோடுகள்) மற்றப் பகுதிகளுக்கு பரவாது. தற்போது வரை இந்த தீத் தடுப்புக் கோடுகளே கோடைக் காலத்தில் காடுகளை பாதுகாக்கும் முக்கிய ஆயுதமாக வனத்துறையினருக்கு இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT