Published : 19 Mar 2018 08:13 AM
Last Updated : 19 Mar 2018 08:13 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது செங்கல் சூளைகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் 2,195 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: பெரியபாளையம், திருவள்ளூர், பூந்தமல்லி, சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் 190 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதம் வரை, பிற மாநில மற்றும் பிற மாவட்டத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வந்து பணிபுரிவது வழக்கம். அத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஏதுவாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செங்கல் சூளைகளின் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் ஒடிசா, ஆந்திர மாநிலம் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வந்து பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களின் குழந்தைகள் 2,195 பேர், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் எல்லாபுரம், திருவள்ளூர், பூந்தமல்லி, சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், கடம்பத்தூர், பூண்டி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் 63 அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகளில் 1,370-க்கும் மேற்பட்டோருக்கு ஒடியா மொழியிலும், சுமார் 800 பேருக்கு தமிழிலும், 17 பேருக்கு தெலுங்கு மொழியிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
20 குழந்தைகளுக்கு ஒரு கல்வி தன்னார்வலர் என்கிறரீதியில், 47 ஒடிசா மாநில தன்னார்வலர்கள், 31 தமிழக தன்னார்வலர்கள், ஒரு ஆந்திர தன்னார்வலர் என 79 தன்னார்வலர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு சீருடை, பாட நூல்கள், நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை தொடக்கக் கல்வி துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும்மதிய உணவு, சத்துணவு திட்டம் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள், செங்கல் சூளைகளில் இருந்து, பள்ளிகளுக்கு சென்று வரும் வகையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஏப்ரல் மாதம் வரை நடக்கும் இந்த சிறப்பு பயிற்சிக்கு பிறகு, குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படும். தொடர்ந்து,குழந்தைகளுக்கு மே மாதம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஓவியம், பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
குழந்தைகள் தங்கள் ஊருக்கு திரும்பும்போது, அங்குள்ள பள்ளிகளில், வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து, கல்வியைத் தொடருவதற்கு ஏதுவாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் சொந்த ஊரில் கல்வியைத் தொடருவதை, அந்த ஊர்களின் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு உறுதி செய்ய ஏதுவாக, முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் தொழிலாளர்களின் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT