Last Updated : 10 Mar, 2018 04:28 PM

 

Published : 10 Mar 2018 04:28 PM
Last Updated : 10 Mar 2018 04:28 PM

“அஸ்வினி கொலையில் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு” – நடிகை கஸ்தூரி

‘அஸ்வினி கொலையில் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு’ என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலி, அஸ்வினி என்ற மாணவி தன்னுடைய முன்னாள் காதலர் அழகேசனால் நேற்று கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, திரைப்படங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்வாதி, சித்ராதேவி, அஸ்வினி… இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்களை காவு கொடுக்கப் போகிறோம்? காதல் என்ற பெயரில் தொடரும் இந்த கொலைபாதக சைக்கோ போக்குக்கு முடிவு என்ன?

தமிழ்ப் பண்பாடு எங்கள் துப்பட்டாவில் ஒளிந்து கொண்டுள்ளதாக கூப்பாடு போடும் கலாச்சார காவலர்களே… ஒரு பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் மனவளர்ச்சி இல்லாத ஆண்களை வளர்த்து விட்டதுதான் உங்கள் சாதனை. இதில், ஒருதலைக்காதலை மிகைப்படுத்திக் காட்டும், பெண்களின் உணவுகளைத் திரித்து மலிவுபடுத்தி, பாலியல் ஆதிக்கத்தை வீரம் என்று சித்தரிக்கும் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஏற்கெனவே போலீஸில் புகார் இருக்கும் நிலையில், அந்த இளைஞனை மீண்டும் சுதந்திரமாக எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் இயங்க அனுமதித்த நமது சட்டங்களையும் புனரமைக்க வேண்டும்.

கணவரை இழந்து, தனி ஒருத்தியாய் மகளை வளர்த்து, அவளது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் அனைத்தையும் இப்போது ஒட்டுமொத்தமாய்த் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் அந்தத்தாயை நினைத்தால் நெஞ்சைப் பிசைகிறது. இது அந்த தாய்க்கு இழைக்கப்பட்ட துரோகம். இது நமது வாழ்வியலின் தோல்வி. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x