Published : 31 Mar 2018 09:36 AM
Last Updated : 31 Mar 2018 09:36 AM
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது. ஆதார் பதிவு மற்றும் அட்டை அச்சிட்டு வழங்கும் பணிகளை யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆதார் பதிவு பணிகளை யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக மேற்கொள்ளாமல், தனியார் முகமைகள் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தனி நபரின் ஆதார் விவரங்கள் வெளியில் கசிந்து விடுமோ என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறாமல், ஆதார் தரவுகளைப் பயன்படுத்தி பேமென்ட் வங்கிக் கணக்குகளைத் திறந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களின் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. இந்நிலையில், ஆதார் தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அறவே இல்லை என்று யுஐடிஏஐ தலைவர் அஜய் பூஷண் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தனி நபர்களின் ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டும் தெரிந்துக்கொள்ளும் வசதியை, யுஐடிஏஐ நிறுவனம், அதன் இணையதளமான http://uidai.gov.in -ல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது:
ஒரு நபர் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, குடும்ப அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தாலோ அது குறித்த விவரங்கள் மற்றும் நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விவரங்களும் யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவாகிவிடுகிறது. அதை யுஐடிஏஐ இணையதள முகப்பு பக்கத்தில் Aadhaar Services என்பதன் கீழ் உள்ள Aadhaar Authentication History -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். அதை கிளிக் செய்யும்போது, ஆதார் எண், பாதுகாப்பு குறியீடு ஆகியவை கேட்கப்படும். அதை கொடுத்தால், சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.
அதன் பின்னர், திரையில் எந்த வகையான விவரங்கள் தேவை என கேட்கும். அதாவது, ஆதார் விவரங்களுக்காக ஓடிபி பெற்றது, பெயர், முகவரி (டெமோகிராபிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது, கருவிழி படலம், கை ரேகை (பயோமெட்ரிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது அல்லது அவை அனைத்தையும் பயன்படுத்தியது தொடர்பானதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால், தனி நபரின் ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்கள் தெரியும். ஒருவேளை ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முற்பட்டு, தோல்வி அடைந்தால், அது குறித்த விவரங்களையும் அதில் பார்க்க முடியும். இதுபோன்ற விவரங்களைக் கடைசி 6 மாதங்கள் வரையிலான, 50 பதிவுகள் மட்டுமே கிடைக்கும்.
இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ஆதார் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் யுஐடிஏஐ நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT