Published : 29 Mar 2018 06:21 PM
Last Updated : 29 Mar 2018 06:21 PM
‘ரஜினியின் கருத்து நல்ல கருத்து. அதை ஆதரிக்கிறேன்’ என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்று கடைசி நாள். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “இரண்டு மாநிலங்களுக்கும் தண்ணீர் வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது அதற்கான வழி. அதைச் செய்ய வேண்டும். இதில் அரசியல் புகுந்து விளையாடினால், அது ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு. ‘ஓட்டு வேட்டைக்காக இந்த விளையாட்டை விளையாடாதீர்கள். தயவுசெய்து மக்களுக்கான தேவை என்ன என்பதைப் பாருங்கள்’ என ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்.
ஒவ்வொரு அரசும் தங்களுக்கு வேண்டிய வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இங்கே தமிழக அரசு யார் பேரைச்சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதோ, வாரியம் அமைப்பதற்கு அவர்கள் வலியுறுத்தாவிட்டால் அந்தப் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக அமையும்.
எங்கள் கோரிக்கையாக, மக்களின் பிரதிநிதியாக இந்த கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். அதற்காக, முதல்வரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளேன். நான் மட்டுமின்றி, எல்லாத் தரப்பில் இருந்தும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.
ஸ்டெர்லைட் பிரச்னைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) தூத்துக்குடி சென்று மக்களுடன் மக்களாக அமர இருக்கிறேன். நான் போக வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், சில பேர் சில காரணங்களுக்காக வரவேண்டாம் என்று சொல்லி இருந்தனர். 47 நாட்களாக அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக அதில் கலந்துகொள்ள வேண்டியது என் கடமை.
‘காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரை நீங்கள் சந்திப்பதன் மூலம் நல்லது நடக்கும் என நம்புகிறீர்களா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், “நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பித்தான் ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான காரியம் அல்ல. நினைத்தால் செய்யலாம். மத்திய அரசுக்கு வலுவான எண்ணம் இருந்தால் அதைச் செய்யலாம்” என்றார்.
‘அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்வேன் என நாடாளுமன்றத்தில் சொன்னதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதையே ஏற்றுக் கொள்ளாதவன் நான். அரசியல் விளையாட்டுக்காக அப்படிச் சொல்லி விளையாடுவதைப் பித்தலாட்டம் என்றே நான் நினைக்கிறேன். அது செய்ய வேண்டியதில்லை. ஆனால், ராஜினாமா செய்வேன் என்று சொன்னவர்கள், உண்மையிலேயே ராஜினாமா செய்தால் அவர்களுக்கு என் பாராட்டு உரித்தாகும்” என்றார் கமல்ஹாசன்.
‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாக இருக்கும்’ என்ற ரஜினிகாந்தின் கருத்து பற்றிய கேள்விக்கு, “ஆதரிக்கிறேன்... நல்ல கருத்து” எனப் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT